உலமா சபையுடன் பேசும் போது, முஸ்லிம் பெண் அமைப்புக்களுடனும் கலந்துரையாட வேண்டும் என கோரிக்கை

🕔 July 23, 2018
– அஷ்ரப் ஏ சமத் –

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் நாளை செவ்வாய்கிழமை கலந்துரையாடும்போது, முஸ்லிம் பெண்கள் அமைப்பினர் மற்றும் இத்துறையில் முஸ்லிம் பெண்கள் விவாகரத்து விடயமாக பாடுபடுகின்ற முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் அமைப்பினரையும் கலந்தாலோசித்தல் வேண்டும்  என, முஸ்லிம் பெண்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.

வெள்ளவத்தை பெண்கள் அபிவிருத்தி நிலையத்தில் இன்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அவர்கள் இதனைக் கூறினர்.

இந்த ஊடக சந்திப்பில் சட்டத்தரணி சபானா குரைஸ் பேகம், சட்டத்தரணி ஹசானா சேகு இஸ்ஸதீன், சட்டத்தரணி பிஸ்லியா பூட்டோ மற்றும் புத்தளம் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி  நம்பிக்கையகம் பிரநிதி ஜூவைரியா மற்றும் மன்னார் மத்திய அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதி என். றஸ்மியா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில்;

“30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண்கள் அமைப்புக்களும் முஸ்லிம் விவாக விவகாரத்துச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களும், பல கட்டங்களிலும் பல தளங்களிலும் அச்சட்டத்தின் குறைபாடு, பக்கசார்பு மற்றும் பாரபட்சம் ஆகியவற்றுக்கு எதிராக குரல் எழுப்பியமை காரணமாக,  கடந்த 09 வருடங்களாகக் கிடப்பிலிருந்த அறிக்கை வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் பல தளங்களில் முஸ்லிம் பெண்களாகிய நாங்கள் ‘இது அரசாங்கத்தின் கடப்பாடு மற்றும் பொறுப்பு என்பதோடு  அவர்களினாலேயே மறுசீரமைபபினை நீதியமைச்சர் மூலம் சட்டவாக்கம் செய்ய வேண்டும்’  என்று கோரிக்கை விடுத்தோம். ஆயினும்  நீதியமைச்சர் ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் முஸ்லிம் ஆண் நாடாளுமன்ற அங்கத்தவர்களின் தீர்மானத்துக்கு மட்டும் இம் மறுசீரமைப்பினைக் கையளித்தமை மிகவும் மன வருத்தத்திற்குரிய விடயமாகும்.

நாளை 24ஆம் திகதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் கலந்துரையாடுவதனால், பெண்கள் சார்பாக எவ்வகையான முடிவுகள் எடுக்கப்படும் என்பது எங்களுக்கு கேள்வியாக உள்ளது.

மலேசியா மற்றும் முஸ்லிம் நாடுகளில் காதி நீதிபதிகளாகப் பெண்கள் பதவி வகிக்கின்றனர். அத்துடன் உயர் நீதிமன்ற மாவட்ட நீதிபதியாகவும் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் பதவி வகிக்கின்றனர். அப்படியிருக்கையில், ஏன் இதுவரை முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் காதி நீதிபதியாக வரமுடியாதுள்ளனர்?

மேலும், காதி மன்றத்தில் பெண்கள் சார்பாக அவர்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்கு சட்டத்தரணிகள் ஆஜராக வேண்டும். பெண்களுக்கு போதிய பாதுகாப்பும் போதிய நிவாரணமும் இச் சட்டத்தில் இல்லை. அத்துடன் முஸ்லிம் பெண்களது திருமன வயது ஆக்ககுறைந்தது 18 என நிர்ணயிக்கப்படல் வேண்டும்.

நீதியரசர் சலீம் மர்சூக் வெளியிட்ட அறிக்கை, முஸ்லிம் நியாயாதிக்கம் மற்றும் இஸ்லாமிய வரைமுறைகளையும் ஏனைய முஸ்லிம் நாடுகளின் ஷரிஆ சட்டத்து நடைமுறைகளையும் உள்வாங்கியே காணப்படுகின்றது. ஆகையால் பல வருடங்களாகக் கிடப்பிலிருந்த மறுசீரமைப்பை முன்நோக்கிச் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைய துரித கதியில் வெளிப்படுத்துமாறு நீதியமைச்சரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

முஸ்லிம் பெண்களாகிய நாங்கள் நீதியரசர் சலீம் மர்சூக்கின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை எவ்வகையிலும் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் அநீதி இழைக்காத  முறையில் துரித கதியிலும், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தினை முஸ்லிம் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு நிவாரணம் அளிக்கும் வகையிலும்  சட்டத்தினை மறுசீரமைத்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்” என்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்