தமிழ் பிரதேச செயலகத்துக்கான எதிர்ப்பை கைவிட்டால், கல்முனை மாநகர சபையில் மு.கா.வுக்கு ஆதரவளிப்போம்: ஹென்றி மகேந்திரன் நிபந்தனை

🕔 April 2, 2018

– அஹமட் –

ல்முனை மாநகரசபையில் மு.காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு த.தே.கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாயின், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உருவாக்கப்படுவதற்கு மு.காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்றும், தேவையேற்படும் போது ஆதரவளிக்க வேண்டும் எனவும், கல்முனை மாநகரசபையின் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

த.தே.கூட்டமைப்புடன் மு.காங்கிரஸ் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, மேற்படி விடயத்தை ஒரு நிபந்தனையாக – தான் முன்வைத்ததாகவும் ஹென்றி மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பருக்கு தொலைபேசி மூலம் வழங்கிய பேட்டியொன்றிலேயே, மாநகரசபை உறுப்பினர் மகேந்திரன் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையில் நடைபெற்ற மேற்படி பேச்சுவார்த்தையில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை. சேனாதிராஜா, அந்தக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்  கலந்து கொண்டதாகவும் ஹென்றி மகேந்திரன் கூறியுள்ளார்.

மேற்படி பேச்சுவார்த்தை கடந்த 29ஆம் திகதி நடைபெற்றது.

இது குறித்து ஹென்றி மகேந்திரன் மேலும் கூறுகையில்;

“கல்முனையில் தமிழர்களுக்கு தனியான பிரதேச செயலகம் வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை மு.காங்கிரஸ் தொடந்தும் எதிர்த்து வருகிறது. மட்டுமன்றி, அவ்வாறானதொரு செயலகம் அமைவதை மு.காங்கிரஸ் தடுத்தும் வருகிறது.

எனவே, தமிழர்களுக்கான கல்முனை பிரதேச செயலகம் அமைவதை மு.கா. எதிர்க்கக் கூடாது என்றும், தேவையாயின் அதற்கு ஆதரவு வழங்க வேண்டுமெனவும், அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட போது நான் கூறினேன்.

ஆயினும், இது தொடர்பில் யோசித்து விட்டு பதிலளிப்பதாக, மு.காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது” என்றார்.

கல்முனை மாநகரசபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

41 உறுப்பினர்களைக் கொண்ட கல்முனை மாநகரசபையில், முகாங்கிரஸ் 12 ஆசனங்களையும் த.தே.கூட்டமைப்பு 07 ஆசனங்களையும் கொண்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்