இரண்டு தமிழ் தலைவர்கள் முன்னிலையில், ஹக்கீமுக்கு பல கோடி ரூபாய்களை, வெளிநாட்டு தூதரகமொன்று வழங்கியதை அறிவேன்: ஜவாத்

🕔 December 29, 2017

– ரி. தர்மேந்திரா –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகமொன்றினால், முக்கியமான தமிழ் தலைவர்கள் இருவர் முன்னிலையில் வைத்து, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பல கோடி ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டதை, தான் அறிந்துள்ளதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத் தெரிவித்தார்.

இவர் இரு வாரங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட ஜவாத், இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து கூறியபோது இவ்வாறு கூறினார்.

இவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்;

“வேற்று நாடுகளின் அணுங்குப் பிடிக்குள் எமது முஸ்லிம் காங்கிரஸ் அடிமைப்பட்டு கிடக்கின்றது என்பதையும் நான் அறிந்து கொண்டேன். கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து அண்மையில் மன்சூர் ஏ காதர் மாற்றப்பட்டமைக்கும் இந்த அணுங்கு பிடியே காரணம் என்றும் அறிந்தேன்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மாத்திரம் அன்றி, வேற்று நாடுகளின் அணுங்கு பிடிக்குள்ளும் சிக்கி அழுந்தி கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மீட்டெடுப்பதற்காகவே, அக்கட்சியை வளர்த்தவன் என்கிற வகையில் தர்ம யுத்தத்தை ஆரம்பித்து உள்ளேன்.

இதற்காகவே நம்பிக்கையான தலைமையுடன் இணைந்துள்ளேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து ரவூப் ஹக்கீமும், அவருடைய அசிங்கம் பிடித்த அடிவருடிகளும் எனது தர்ம யுத்தம் மூலமாக துரத்தப்படுவார்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்