ரணில் வாக்கு மாறினார்; மனோ வெளியேறினார்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குழப்பம்

🕔 August 22, 2017

– முன்ஸிப் அஹமட் –

னாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற  கட்சித் தலைவர்கள் கூட்டத்திலிருந்து அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், இடைநடுவில் வெளியேறினார்.

ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற மேற்படி கூட்டத்திலிருந்து அமைச்சர் வெளியேறியிருந்தார்.

இந்தத் தகவலை அமைச்சர் மனோ கணேசன், அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள் மற்றும் அரசியலைமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், உள்ளூராட்சி சபை தேர்தல் பற்றி பேசும்போது, தேர்தலுக்கு முன்னர் புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்க முடியாது என் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். நாடு முழுவதும், புதிய சபைகள் அமைக்க வேண்டுமென கோரிக்கைகள் உள்ளன. எனவே, அதை இப்போது செய்ய முடியாது என பிரதமர் காரணம் கூறினார்.

அப்போது நான் இடைமறித்தேன்.

“நாட்டின் ஏனைய பிரதேசங்களில் புதிய சபைகளை பிறகு உருவாக்கலாம். ஆனால், நுவரெலியா மாவட்டத்துக்கு விசேட கரிசனை காட்ட வேண்டும். அங்கே ஒவ்வொன்றும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் இரண்டு சபைகள் இப்போது உள்ளன. ஒன்று, நுவரேலிய பிரதேச சபை. மற்றையது அம்பகமுவ பிரதேச சபையாகும்.

நாட்டின் ஏனைய இடங்களில் பத்தாயிரம் பேருக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது, நுவரேலியா மாவட்டத்தில் மட்டும் இப்படி இரண்டு லட்சம் பேருக்கு ஒரு சபை என்ற கணக்கில், நான்கு லட்சம் பேருக்கு இரண்டு சபைகள் இருப்பது மாபெரும் அநீதியாகும். இது கடந்த முப்பது வருட காலமாக மலையக தமிழருக்கு மாத்திரம் இந்நாட்டில் இழைக்கப்பட்டு வரும் அநீதியாகும். நாட்டில் ஏனைய சபைகளை உருவாக்குவதை பிறகு பார்த்துக்கொள்வோம்.’நுவரேலியாவில் மட்டும் புதிய சபைகளை தேர்தலுக்கு முன்பாக அமைத்து தருவோம்’ என, எனக்கு நீங்கள் உறுதி அளித்தீர்கள். அதை இப்போது செய்யுங்கள்” என பிரதமரிடம் நேரடியாக கூறினேன்.

இது தொடர்பில் பிரதமரின் உறுதிமொழியை நம்பி, தமிழ் மக்களுக்கு நான் உறுதியளித்துள்ளேன். அடுத்த தேர்தல் இன்னும் ஐந்து வருடங்களுக்கு பிறகு நடைபெறும். அதுவரை எங்கள் மக்களுக்கு மட்டும், நல்லாட்சி என்ற அரசாங்கத்தில் இந்த அநீதி நீடிக்க முடியாது என்பது என் நிலைப்பாடாகும்.

என் நிலைப்பாட்டை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஆதரித்தார். எனினும் இதுபற்றி முடிவெடுத்து, மலையக தமிழருக்கு மட்டும் இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதியை துடைக்க, அந்தக் கூட்டத்தில் எவருக்கும் மனம் இல்லாததை உணர்த்த பிறகும் அங்கே அமர்ந்து, தலையாட்டிக்கொண்டு இருக்க என்னால் முடியவில்லை. எனவே, உடனடியாக அந்தக் கூட்டத்திலிருந்து இடைநடுவில் எழுந்து வந்து விட்டேன்”.

மேற்படி கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன், அமைச்சர்கள் லக்ஷ்மன் கிரியல்ல, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, நிமல் சிறிபால டி சில்வா, ரஊப் ஹக்கீம், பி. திகாம்பரம், கபீர் ஹாசீம், ராஜித சேனாரத்ன, சம்பிக ரணவக்க, சுசில் பிரேமஜயந்த, சரத் அமுனுகம, அனுர பிரியதர்ஷன யாபா, டிலன் பெரேரா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்