சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, மஹிந்த ராஜபக்ஷவின் உதவியைக் கோருகின்றார் அமைச்சர் அமரவீர

🕔 July 15, 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடுத்த முறை தனித்து ஆட்சியமைப்பதற்கு, மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு வழங்க வேண்டுமென்று அமைச்சர் மகிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தும் திட்டம் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவருடன் இருக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் கிடையாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ இனி ஜனாதிபதியாக வரமுடியாது என்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தனது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தி, பலவீனப்படுத்துவதற்கு மஹிந்த அணிக்குள் சிலர் முயற்சி செய்கின்றனர்.

அந்த அணியிலுள்ள சில இளைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய கட்சியொன்றை உருவாக்குவதற்கு முயற்சி செய்கின்றனர்.

புதிய கட்சியொன்றின் ஊடாக வெகு விரைவில் மூத்த அரசியல்வாதிகளாக மாறமுடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தும் திட்டம் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவருடன் இருக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் கிடையாது.

இனி மஹிந்த ராஜபக்ஷவால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆகையால் 2020ஆம் ஆண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ உதவ வேண்டும்.

இந்த உதவியைத்தான் நாம் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். இந்த வருடத்தின் முதல் தேர்தலாக உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் இடம்பெறவுள்ளது.

எல்லை நிர்ணயத்திலுள்ள சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்பட்டு தேர்தல் விரைவில் நடத்தப்படும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெறுவதற்கேற்ப வியூகம் வகுக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல்களும் இடம்பெறும்.

பிளவுபடாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்தே இந்தத் தேர்தல்கள் அனைத்தையும் எதிர்கொள்வதற்கும் அவற்றை வெற்றி கொள்வதற்கும் நாம் பாடுபடுகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்