நுகேகொட கடையெரிப்பு சம்பவம்: நாசகாரிகளை கைது செய்யுமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல்

🕔 June 6, 2017

நுகேகொட கடை எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நாசகாரிகளை  உடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை அதிகாலை விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள, முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான கடையொன்றுக்கு நாசகாரிகளால் தீவைக்கப்பட்டது.

இந்தக் கடைக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட், சம்பவங்களை பார்வையிட்டதுடன் அதன் உரிமையாளரிடமும் விபரங்களை கேட்டறிந்தார்.

இதனையடுத்து, நுகேகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாயுடன் உரையாடிய அமைச்சர், இவ்வாறான சம்பவம் இந்தப் பகுதியில் இடம்பெற்றமை முதற்தடவை அல்ல எனவும், இந்தப் பகுதியில் 3ஆவது தடவையாக கடைகள் எரிக்கப்பட்டிருப்பதாகவும்  சுட்டிக்காட்டினார். மேலும், பொலிசார் தமது கடமைகளை விழிப்புடன் மேற்கொள்ளாதவரை, இனவாத நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது எனவும் அவர் கூறினார்.

இதன் பின்னர் அமைச்சர் சாகல ரட்நாயக்காவுடன் தொடர்புகொண்ட அமைச்சர் றிசாட், நிலைமைகளை விளக்கினார். ஏத்தனையோ உறுதி மொழிகளை அரசாங்கம் முஸ்லிம்களுக்கு வழங்கிய போதும், சட்டத்தின் பிடியிலிருந்து நாசகாரிகள் தப்பியே வருகின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கெதிரான நடவடிடக்கைகள் நிறுத்தப்பட்டதாகவும்  தெரியவில்லை. தொடர்ச்சியயாக தினமும் ஏதாவதொரு சம்பவம் திட்டமிட்டும் குறித்த இலக்கை நோக்கியும் நகர்த்தப்படுவதை சட்டத்தின் காவலர்களும் அரசாங்கமும் புரிந்துகொண்டு, இவற்றை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று வலியுறுத்தினார்.

முஸ்லிம் சமூகம் பீதியானதொரு நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாகவும் அவர் சாகலவிடம் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்