தலைப்புச் செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் பதவி ஆட்சேர்ப்பில் முறைகேடு எனத் தெரிவித்து: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

– பாறுக் ஷிஹான் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற கல்விசாரா ஊழியர்களுக்கான தொழில்நுட்ப உத்தியோகத்தர் தரம் II, பிரிவு “B” (உள்ளக) பதவிக்கான ஆட்சேர்ப்பு தொடர்பில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் பாரபட்சங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்டோர் எனக் கூறப்படுவோர் தமக்கான நிவாரணத்தைப் பெற்றுத்தரும்படி கோரியும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்முறைப்பாடு செய்துள்ளனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் – இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதை, அந்த அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு, ‘புதிது’ செய்தித்தளம் உறுதி செய்து கொண்டது.

தகுதியும் நீண்டகால அனுபவமும் கொண்ட ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டு, குறிப்பிட்ட சிலருக்குச் சாதகமான முறையில் தெரிவுகள் இடம்பெற்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக, ஆய்வுகூடத் தொழில்நுட்பப் பணிகளுடன் நேரடித் தொடர்பற்ற துறைகளில் பணியாற்றியவர்களுக்கு – எவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட்டது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், கல்விசாரா ஊழியர்களின் உள்ளகப் பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் முக்கிய நிர்வாகப் பொறுப்பைக் கொண்ட பதிவாளர் – உரிய முறையில் உள்வாங்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டாரா? உபவேந்தரின் விருப்பத்திற்கேற்ப மாற்று நிர்வாகக் குழுவொன்று இந்நடவடிக்கைகளை முன்னெடுத்ததா? என்பன தொடர்பிலும் பாதிக்கப்பட்டதாகக் கூறுவோர் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், தங்களுக்கு இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் அநீதிக்கு நீதி கோரி பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து, குறித்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஊழியர் சங்கத்தின் செயலாளர் உபவேந்தரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கேட்டபோதும், அதனை உபவேந்தர் நிராகரித்து விட்டதாகவும், இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்டோர் கூறுகின்றனர்.

மேலும், உபவேந்தரிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீடுகளுக்கும், ஊழியர் சங்கத்தின் தலையீட்டிற்கும் இதுவரை உரிய தீர்வோ பதிலோ கிடைக்காத நிலையில், குறித்த நியமன விவகாரம் தொடர்பில் எந்தவிதமான விசாரணைகளோ அல்லது உரிய நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்டதாகக் கூறும் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஊடாகத் தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கருதும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள், தற்போது குறித்த விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.

எழுத்துப் பரீட்சைப் பெறுபேறுகள், நேர்முகத் தேர்வுப் புள்ளிகள், விண்ணப்பதாரர்களின் மதிப்பீட்டு விபரங்கள் உள்ளிட்ட தகவல்களும் கோரப்பட்டுள்ள நிலையில், அவற்றை வெளிப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதமும் வெளிப்படைத்தன்மை தொடர்பான சந்தேகங்களை மேலும் அதிகரித்துள்ளதாகவும் இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறும் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.