
இலங்கையில் தகுதியுள்ள வைத்தியர்கள் அல்லாத சுமார் 40,000 நபர்கள் மருந்துகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, வைத்திய நிபுணர்கள் சங்கம் (Association of Medical Specialists – AMS) தெரிவித்துள்ளது.
இந்த நிலை பொது சுகாதாரத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக, அச்சங்கத்தின் தலைவரும் சமூக மருத்துவ நிபுணருமான டாக்டர் ருவான் பெர்டினாண்டோ தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் (antibiotics) முறையற்ற மற்றும் அதிகப்படியான பயன்பாடு, குறிப்பாக பக்டீரியாக்களிடையே ‘நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன்’ (antimicrobial resistance) அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றது என்று டொக்டர் ருவன் பெர்டினாண்டோ எச்சரித்தார்.
நோயாளிகள் தாங்களாகவே மருந்துகளைப் பெற்றுக்கொள்வது, வைத்தியர்களிடம் அவற்றை வற்புறுத்திக் கேட்பது, மற்றும் நோயாளிகளின் எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டு வைத்தியர்களே அடிக்கடி நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பரிந்துரைப்பது போன்ற காரணங்களால் இவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் வைத்தியத் தகுதி பெறாத சுமார் 40,000 நபர்கள் மருந்துகளை விநியோகித்து வருவதாகவும், இவர்களால் நுண்ணுயிர் எதிர்ப்பிகளும் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலை தொடர்ந்தால், மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறன் அதிகரித்து, தொற்று நோய்களைக் குணப்படுத்துவதற்கு மருந்துகள் பயனற்ற நிலையை எட்டிவிடும் என்று அவர் எச்சரித்தார்.
மருத்துவத் தகுதி பெறாத இந்த 40,000 நபர்கள் யார் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த டொக்டர் ருவன் பெர்டினாண்டோ, இவர்களில் ஒரு பிரிவினர் முறையான கல்வித் தகுதிகள் ஏதுமின்றி, மருந்தகங்களில் பணியாற்றிய அனுபவத்தின் மூலம் மருந்துகளைப் பற்றித் தெரிந்துகொண்டவர்கள் என்று விளக்கினார்.
சட்டப்படி, இலங்கை மருத்துவ சபையில் (Sri Lanka Medical Council) பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் மட்டுமே நவீன மருத்துவ மருந்துகளைப் (western medicines) பரிந்துரைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தரப்பினருக்கு வெளியே உள்ள நபர்கள் – நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பரிந்துரைக்கும் சம்பவங்கள் குறித்து தீவிரமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும், இது குறித்து சமூக மட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



