
– நூருல் ஹுதா உமர் –
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் எதிர்நோக்கும் நீண்டகால சம்பள முரண்பாடுகள் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாத நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தினால், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வழமையான நிர்வாக நடவடிக்கைகள் இன்று (18) பெரிதும் பாதிக்கப்பட்டன.
2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் நீண்டகால சம்பளப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு முன்வைக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, 20 சதவீதக் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர்கள் சங்கம் (SEUEOA), தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் (SEUEU), பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டுக் குழு (UTUJC) மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்க சம்மேளனம் (Inter University Trade Union Federation) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நாடளாவிய ரீதியில் இவ்வடையாள வேலைநிறுத்தம் இடம்பெற்றது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுகளில் பல்கலைக்கழக ஊழியர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் சம்பள முரண்பாடுகள் மற்றும் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளுக்குப் போதிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என, தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறிப்பாக, அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள், 20 சதவீதக் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மேலதிக நேரப் பணிக்கான கொடுப்பனவுகள் ஆகியவற்றில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் பல்வேறு கொடுப்பனவுகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் நீண்டகாலமாகப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், நடைமுறையில் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய உறுதியான தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தொழிற்சங்கப் போராட்டத்தின் காரணமாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சில நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய வழமையான சேவைகள் பாதிக்கப்பட்டன.




