
பௌத்த மரபுப்படி பக்தர்கள் – வரலாற்று ரீதியாக மத நோக்கங்களுக்காக முழு சொத்துக்களையும் கிராமங்களையுமே கூட நன்கொடையாக வழங்கியிருக்கும் நிலையில், ஒரு ஹோட்டல் அறையை வைத்து ஏன் இவ்வளவு சர்ச்சை உருவாக்கப்படுகிறது என்று பலாங்கொட கஸ்ஸப தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றுக்கு கஸ்ஸப தேரர் சென்றது குறித்த வீடியோ, சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அவர் வழங்கியுள்ள விளக்கத்திலேயே, இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
கலபொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி நடைபெற்று வரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கில், அரசாங்க ஆதரவாளர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சர்ச்சை குறித்துப் பேசிய தேரர், தான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக பக்தர்கள் தங்குமிட வசதியையும் மருத்துவ உதவியையும் ஏற்பாடு செய்திருந்ததாகவும் தெரிவித்தார்.
தனக்கு சுமார் 102 டிகிரி பரனைட் காய்ச்சல் இருந்ததாகவும், போராட்டத்தின் போது – தான் ஓய்வெடுப்பதற்காக, ஆதரவாளர்கள் சில இடங்களை ஏற்பாடு செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்று வரும் போராட்ட இடத்திற்கு அருகிலேயே இருக்க விரும்பியதால், பல அழைப்புகளைத் தான் நிராகரித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
பக்தர்களின் அழைப்பின் பேரில் சில இடங்களுக்குச் சென்றதாகவும், அங்கு வைத்தியக் குழுவினர் தனக்கு சிகிச்சை அளித்ததாகவும் அவர் கூறினார்.
தங்குமிட வசதி மற்றும் பிற உதவிகளைப் பெற்றுக்கொண்டதை நியாயப்படுத்திய அவர், பௌத்த மரபுப்படி, பக்தர்கள் நீண்டகாலமாகவே பிக்குகளுக்கும் மத நிறுவனங்களுக்கும் உணவு, தங்குமிடம், வாகனங்கள், நிலம் மற்றும் வீடுகளைக்கூட வழங்கி வந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
“சிலர் ஒரு போத்தல் தண்ணீரை வழங்கலாம்; வேறு சிலர் கூடாரங்கள், உணவு அல்லது தங்குமிடத்தை வழங்கலாம். இன்னும் சிலர் தங்கள் வீடுகளையும் நிலங்களையுமே கூட வழங்க முன்வருகிறார்கள்” என்று அவர் கூறினார்.
பௌத்த மரபுப்படி, பக்தர்கள் வரலாற்று ரீதியாக மத நோக்கங்களுக்காக முழு சொத்துக்களையும் கிராமங்களையுமே கூட நன்கொடையாக வழங்கியிருக்கும் நிலையில், ஒரு ஹோட்டல் அறையை வைத்து ஏன் இவ்வளவு சர்ச்சை உருவாக்கப்படுகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பிக்குகளுக்கு உதவி செய்பவர்களின் தனிப்பட்ட மற்றும் உணர்திறன் மிக்க தகவல்கள் கசிந்தது குறித்தும் தேரர் கவலை தெரிவித்தார்.
ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை நிர்வகிக்கும் நபர்கள், உதவி செய்பவர்களின் தனிப்பட்ட விவரங்களையும் அடையாளத் தகவல்களையும் ஊடகங்களுக்குக் கசியவிட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்தத் தகவல் கசிவை ஒரு தீவிரமான விவகாரமாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய சம்பவங்கள் இலங்கையில் இயங்கும் சர்வதேச ஹோட்டல்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கக்கூடும் என்று எச்சரித்தார்.
தனிப்பட்ட தகவல்களை வெளியிட்ட விவகாரம் தொடர்பாக – சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், போராட்டத்திற்கு ஆதரவளிப்பவர்களை அச்சுறுத்தும் நோக்கில், பிக்குகள் பயன்படுத்தும் வாகனங்களைப் புகைப்படம் எடுத்து, அவற்றின் உரிமையாளர்களைக் கண்டறிந்து, அந்தத் தகவல்களை ஊடகங்களுக்கு அரசாங்க ஆதரவாளர்கள் கசியவிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நட்சத்திர ஹோட்டலொன்றுக்கு சென்றிருந்த கஸ்ஸப்ப தேரர், தனது காவி ஆடையினால் முகத்தை மூடிக் கொண்டு சென்ற படம் வெளியாகி இருந்தது. அங்கு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவும் காணப்பட்ட வீடியோவும் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



