தலைப்புச் செய்திகள்

“ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய போது, என்னை தவறாக வழிநடத்தி விட்டனர்”: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியபோது, ​​ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தன்னைத் தவறாக வழிநடத்தியதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதன் காரணமாக ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பக் குறைபாடே, ஞனாசா தேரர் மீண்டும் சிறை செல்லக் காரணமாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன இன்று (19) வெளியிட்ட அறிக்கையொன்றில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பின் நகலை ஆராய்ந்ததன் மூலம், ஜனாதிபதி செயலகம் சமர்ப்பித்த ஆவணங்களில் இருந்த தொழில்நுட்பக் குறைபாடே – நீதிமன்றத்தின் இந்த முடிவுக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்டதாக மைத்திரி கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் சட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான மேலதிக சிரேஷ்ட செயலாளர், இந்த பொதுமன்னிப்பு தொடர்பாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று தன்னிடம் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தேவையான ஆவணங்கள் அமைச்சுக்கு அனுப்பப்படவில்லை என்றும், உரிய அனுமதியைப் பெறாமலேயே தனது கையொப்பம் பெறப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“இது என்னை தவறாக வழிநடத்தும் செயலாக இருந்தது” என்று சிறிசேன கூறியுள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் அதிகாரிகள் செய்த இந்தத் தவறுதான், சந்தியா ஏக்னெலிகொடவின் முறைப்பாட்டின் பேரில் (பாக்கியசோதி சரவணமுத்துவுடன் தொடர்புடைய ஒரு அமைப்பின் பங்களிப்புடன்) முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் விளைவாக, ஞானசார தேரர் மீண்டும் சிறை செல்லக் காரணமானது என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் முடிவை மதிப்பதாகவும், அந்தத் தீர்ப்பு சரியானது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளால் இந்தத் தவறு இழைக்கப்பட்டிருந்தாலும், இதற்காக பௌத்த மதகுருமார்களிடம் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பில் தாக்கம் செலுத்திய அந்தத் தொழில்நுட்பக் குறைபாடு குறித்து பௌத்த பிக்குகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் விளக்கம் கோரியதைத் தொடர்ந்தே, தான் இந்த அறிக்கையை வெளியிடுவதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.