
ஏர்பஸ் (Airbus) விமான கொள்முதல் தொடர்பான ஒரு பரிவர்த்தனையில் நாமல் ராஜபக்ஷ 100 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், அவுஸ்ரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியதாக, லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார தெரிவித்தார்.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் நேற்று நாமல் ராஜபக்ஷ ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதன்போது நீதிமன்றில் தனது வாதங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார; சர்ச்சைக்குரிய ஏர்பஸ் பரிவர்த்தனை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு ஆகியவை இணைந்து நடத்திய விசாரணையின் விளைவாகவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
பல நாடுகள் ஒத்துழைத்தன
”அவுஸ்ரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் பரஸ்பர ஒத்துழைப்புடன், இந்த விசாரணை இப்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு விமானத்திற்கும் 1 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சமாகப் பெறத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
சர்ச்சைக்குரிய இந்த ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தத்தில், 1.454 மில்லியன் யூரோக்கள் லஞ்சமாக வழங்கப்பட்டன. இப்பணம் சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் ‘BIZ Solutions INC’ என்ற பெயரில் பராமரிக்கப்பட்ட கணக்கிற்கு ஏர்பஸ் நிறுவனத்தால் செலுத்தப்பட்டது. இக்கணக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனாவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்காவிற்குச் சொந்தமானதாகும்.
அக்கணக்கிலிருந்து, 2014-ஆம் ஆண்டு நவம்பர் 19 மற்றும் டிசம்பர் 22 ஆகிய திகதிகளில், சிங்கப்பூரில் உள்ள OCBC வங்கியில் ‘Sabre Vision Holding Ltd’ என்ற பெயரில் பராமரிக்கப்பட்ட கணக்கிற்குப் பணம் இருமுறை மாற்றப்பட்டது. நிமல் பெரேரா தலைவராக இருந்த நிறுவனம் இதுவாகும்.
நாமலுக்கு பணம் வழங்கினேன் – நிமல் பெரேரா வாக்குமூலம்
இதற்கிணங்க, தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் நிமல் பெரேராவைத் தேடி விசாரணை அதிகாரிகள் அங்கு சென்று, அவரிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவர் இலங்கை வர மறுத்துவிட்ட நிலையில், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் – அவர் ஓர் உறுதிமொழிப் பத்திரத்தை (affidavit) வழங்கியுள்ளார்.
‘BIZ Solutions INC’ என்ற பெயரிலான கணக்கிலிருந்து தனக்குச் சொந்தமான ‘Sabre Vision Holding Ltd’ கணக்கிற்குப் பெறப்பட்ட 800,000 அமெரிக்க டாலர் தொகையை, நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைத்ததாக அவர் கூறுகிறார்.
சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான எந்தவொரு விசாரணையிலும் ஒத்துழைக்க ஏர்பஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, ஏர்பஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இதுவரை மூன்று முறை இலங்கைக்கு வருகை தந்து, நான்கு வாக்குமூலங்களை அளித்துள்ளனர். மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பான பல ஆவணங்களையும் அவர்கள் விசாரணை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர்.
இதன் மூலம், ஏர்பஸ் நிறுவனத்திற்கும் சந்தேகநபருக்கும் இடையிலான தொடர்பு குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளன. எனவே, இச்சூழ்நிலைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்” என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
நாமலின் சட்டத்தரணி கூறியதென்ன?
சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் பின்வருமாறு சமர்ப்பனங்களை முன்வைத்தார்;
“நிமல் பெரேரா என்ற நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே, எனது கட்சிக்காரர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டுள்ளார். அவருக்குப் பணம் வழங்கியதாக பிரெஞ்சு அதிகாரிகளோ அல்லது ஏர்பஸ் (Airbus) நிறுவன அதிகாரிகளோ எங்கும் குறிப்பிடவில்லை.
குறிப்பிட்ட நிமல் பெரேரா சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கு, ‘கிரிஷ் (Krrish) பரிவர்த்தனை’ தொடர்பாக மேல் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ளது. அந்த வழக்கிலும், ‘சேபர் விஷன் ஹோல்டிங் லிமிடெட்’ (Sabre Vision Holding Ltd) என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான கணக்கு ஒன்றிற்குப் பணம் பெறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த வழக்கில், அந்தக் கணக்கு தனக்குச் சொந்தமானது அல்ல என்றும், தனது இத்தாலிய நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும் நிமல் பெரேரா கூறியிருந்தார்.
அதன்படி, நிமல் பெரேரா அன்று ஒரு விஷயத்தையும் இன்று வேறொரு விஷயத்தையும் கூறுகிறார். 2019-ல், நிமல் பெரேரா கூறியதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நம்பவில்லை. அப்படியிருக்கையில், 2026-ல் நிமல் பெரேராவின் கூற்றை எப்படி நம்ப முடியும்?
‘இதுதான் உண்ண வேண்டும் என்று நினைக்கும்போது, உடும்பை நில உடும்பாக (monitor lizard to land monitor) மாற்றிக்கொள்ளும் கொள்கை’ என்று அழைக்கப்படுகிறது. எனவே, இதை ஒரு சிறப்பான சூழ்நிலையாகக் கருதி – எனது கட்சிக்காரருக்குப் பிணை வழங்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதன் பின்னரே, நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.



