
பாதாளக் குற்றக் கும்பலைச் சேர்ந்தமவர் என சந்தேகிக்கப்படும் கெஹல்பத்ர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகளிலிருந்து, 07 நடிகைகள், மொடல்கள் மற்றும் 09 அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் தினைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சந்தேக நபரின் கைபேசிகளை ஆய்வு செய்தபோது, ஒன்பது அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், மேலும் ஏழு நடிகைகள், மொடல்கள் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சிஐடி தெரிவித்துள்ளது.
கண்டெடுக்கப்பட்டவை குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரிடமிருந்து 08 கைபேசிகள் மீட்கப்பட்டன. அந்த சாதனங்களில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்டிருந்தபோதிலும், புலனாய்வாளர்களால் அவற்றை மீட்க முடிந்ததாக, சிஐடி கூறியுள்ளது.
மீட்கப்பட்ட தரவுகளில் 8,841 தொலைபேசி அழைப்புகளின் விவரங்கள், 326,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 1,101 ஒலிப்பதிவுகள் மற்றும் 5,039 வீடியோகள் ஆகியவை அடங்கும் என நீதிமன்றத்தில் சிஐடி தெரிவித்துள்ளத.
முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 20 பேர் தொடர்பான தகவல்களையும் புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இத்தகவல்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அந்த தொலைபேசிகளில் 13 சிறை அதிகாரிகளுக்குச் சொந்தமான தொலைபேசி எண்களும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் நபர்களுக்குச் சொந்தமான 19 கடவுச்சீட்டுகளின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், புலனாய்வாளர்கள் 17 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வருவதாகவும் நீதிமன்றுக்கு கூறப்பட்டுள்ளது.
கெஹல்பத்ர பத்மே 2021 மே மாதம் இலங்கையிலிருந்து சட்டப்பூர்வமாக வெளியேறியதிலிருந்து சுமார் 15 முறை 13 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் லாவோஸ் ஆகியவை அந்த நாடுகளில் அடங்கும்.
கெஹல்பத்ர பத்மே இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவரை செப்டம்பர் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.



