
– கே.ஏ. ஹமீட் –
அக்கரைப்பற்றில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தை – சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்குள் இயங்கும் சமூக சேவைகள் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக இடம்மாற்றுவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள், பொதுமக்கள் மத்தியிலும் துறைசார் அதிகாரிகள் மத்தியிலும் பெரும் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திலுள்ள கலாசார கட்டிடம் புனரமைப்பு செய்யப்படவுள்ளதைக் காரணம் காட்டி, எதிர்வரும் செப்டம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர், இவ் அலுவலகத்தை சாய்ந்தமருதுக்கு மாற்ற – கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக அறியமுடிகின்றது. இருப்பினும், இத்தீர்மானம் நியாயமான தீர்வாக அமையாது என சுட்டிக்காட்டப்படுகிறது.
கடந்த அரசாங்கத்தில், இதனை அம்பாறைக்கு இடமாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகளை அப்போதைய அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்தினர். தற்போது தாற்காலிக இடமாற்றம் என்கிற போர்வையில் செல்லும் மாவட்ட அலுவலகம் – மிக எளிதில் அம்பாறை நகருக்கு செல்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கான சேவைகளை வழங்கும் முக்கிய மையமாக அக்கரைப்பற்றிலுள்ள மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம் திகழ்கிறது.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் பயன்பாட்டிற்குப் பொருத்தமான அரச அல்லது தற்காலிக கட்டிடங்கள் பல இருக்கத்தக்கதாக, பிறிதொரு பிரதேச செயலகப் பிரிவிற்கு மேற்படி அலுவலகத்தை இடமாற்றுவது பொருத்தமான நிர்வாக நடைமுறையல்ல எனக் கூறப்படுகிறது.
சாய்ந்தமருது சமூக பராமரிப்பு நிலையத்தில் தற்போது பணியாற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்களைத் தவிர்த்து – ஏனைய ஊழியர்களை இடமாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளமை, ஊழியர்களின் அன்றாடப் பணிகளையும் தடையின்றி சேவை வழங்குவதையும் பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, அம்பாறை மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பொதுமக்களினதும், மாற்றுத்திறனாளிகளினதும் நலனைக் கருத்திற் கொண்டு, மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தை அக்கரைப்பற்று பிரதேசத்திற்குள்ளேயே தொடர்ந்து இயங்கச் செய்வதற்கு ஏதுவான நடவடிக்கையினை மேற்கொள்வது பொதுமக்களுக்கான சிரமத்தை தவிர்க்க ஏதுவாக அமையும்.
அந்த வகையில், இந்த அவசர இடமாற்றத் தீர்மானத்தை உடனடியாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு – கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் பிரதேச பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



