தலைப்புச் செய்திகள்

கைரேகைப் பதிவுக்கு இணங்காது விட்டால், வேறு வேலை தேடிக் கொள்ளலாம்: தபால் ஊழியர்களுக்கு அமைச்சர் நளிந்த எச்சரிக்கை

கடமைக்கு வருவதை கைரேகை மூலம் உறுதிப்படுத்துதல் (fingerprint attendance) மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான அரசாங்க முடிவுகளுக்கு தபால் தொழிற் சங்கங்கள் உடன்பட்டால் மட்டுமே அவர்களைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று (19) தெரிவித்தார்.

குறுகிய கால வேலைநிறுத்தங்கள் கூட தபால் துறைக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் என்று கூறிய அவர், நீண்ட வேலைநிறுத்தங்கள் திறைசேரியை பாதிக்கக்கூடும் எனவும், எதிர்கால சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளையும் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, தபால் தொழிற்சங்கங்கள் முன்வைத்த 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகளை அரசாங்கம் தீர்த்துவிட்டதாகக் கூறினார்.

“இருப்பினும், கைரேகை பதிவு மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, மேலும் அவை ஏற்றுக்கொள்ளப்படாது. பல்வேறு அரசியல் சார்புகளைக் கொண்ட சில குழுக்கள் கைரேகை பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த முறைக்கு உடன்படாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலதி நேர கொடுப்பனவுகளில் மாற்றங்கள் மற்றும் கைரேகை பதிவு முறையை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை (17) நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். இந்த வேலைநிறுத்தம் நாடு தழுவிய முக்கிய சேவைகளை சீர்குலைத்துள்ளது.