தலைப்புச் செய்திகள்

அரிசித் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70 ஆயிரம் டொன் அரிசி இறக்குமதி செய்ய தீர்மானம்: அமைச்சர் வசந்த அறிவிப்பு

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அதிகபட்சமாக 70,000 டொன்களுக்கு உட்பட்டு நாட்டு அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

லங்கா சதொச மற்றும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படும் என்றும், டிசம்பர் 15 ஆம் திகதிக்குள் அரிசி இருப்புக்களை சந்தையில் கிடைக்கச் செய்யுமாறு இரு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடக சந்திப்பில் கூறியுள்ளார்.

லங்கா சதொச மற்றும் அரச வர்த்தகக் கூட்டுத்தபானம் ஆகியவை ஏற்கனவே வழங்குநர்களுடன் கலந்துரையாடியதாகவும், 30க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் அரிசியை இறக்குமதி செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோ ஆகக் கூடியது 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

புள்ளிவிபரங்களின்படி, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் 4.8 மில்லியன் டொன் நெல் அறுவடை கிடைத்துள்ளதாகவும், அதில் 3.1 மில்லியன் டொன்கள் நாட்டு அரிசி என்றும் அவர் கூறினார்.

”3.1 மில்லியன் டொன் நெல்லில் இருந்து 2.2 மில்லியன் டொடன் நாட்டு அரிசியை உற்பத்தி செய்ய முடியும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2.2 மில்லியன் டொன்களை 12 மாதங்களாகப் பிரித்தால் மாதம் 183,000 டொன் அரிசியை வழங்க முடியும். நாட்டிற்கு மாதம் ஒன்றுக்கு 140,000 டொன்கள் மட்டுமே தேவையாவுள்ளது. அதாவது நாட்டில் நெல் விளைச்சல் மேலதிகமாக உள்ளது என்பது இதன் அர்த்தமாகும். ஆனால், விவசாய அமைச்சின் தரவுகளை நாம் முழுமையாக நம்ப முடியாது.

வரும் பெரும்போகத்தில் நெல் அறுவடைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அரிசி இறக்குமதி செய்யப்படும் என்று கூறிய அமைச்சர், இரண்டு வாரங்களுக்கு மட்டும் போதுமான அளவு 70,000 டொன் மட்டுமே அரிசி இறக்குமதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.