தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி பதவிக்கான போட்டியிருந்து விலகுவதாக சஜித் அறிவிப்பு

ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

“நான் நேசிக்கும் எனது நாட்டடுக்கும், நான் நேசிக்கும் மக்களின் நலனுக்காகவும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் எனது தீர்மானத்தை இதன் மூலம் திரும்பப் பெறுகிறேன். ஐக்கிய மக்கள் சக்தி, எங்கள் கூட்டணி மற்றும் எங்கள் எதிர்க்கட்சி பங்காளிகள் ஆகியோர் டலஸ் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்” என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான மக்கள் எழுச்சி காரணமாக அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவி வெற்றிடமானது.

அதன் பின்னர் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் மூலம் தெரிவு செய்யும் வரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் இன்று காலை 10.00 மணிக்கு சமர்ப்பிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பமானது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் அலகப்பெரும, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்றில் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்னதாகவே சஜித் பிரேமதாச போட்டியிலிருந்து விலகிக்கொண்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றில் ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அலகப்பெருமவின் பெயரை பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல். பீரில் பிரேரிக்க, அதனை சஜித் பிரேமதாச வழிமொழிந்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தினேஷ் குணவர்த்தன பிரேரிக்க, அதனை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்ட மனுஷ நாணயகார வழிமொழிந்தார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி நாடாமன்றத்தில் நடைபெறவுள்ளது.