தலைப்புச் செய்திகள்

மஹிந்த, பசில், கப்ரால், ஆர்டிகல உள்ளிட்டோருக்கு பயண தடை விதிக்கக் கோரும் நகர்த்தல் பத்திரம்; உச்ச நீதிமன்றில்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், டபிள்யூ.டி. லக்ஷ்மன் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆர்டிகல ஆகியோர் – உச்ச நீதிமன்றின் முன் அனுமதி பெறாமல் – நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடைவிதிக்கக் கோரும் நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மற்றும் ஜெஹான் கனக ரெட்ன ஆகியோர் தாக்கல் செய்த இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவிற்கு அமைய இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில், நிதி முறைகேடுகள் மற்றும் இலங்கை பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்துக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

சட்டத்தரணி உபேந்திர குணசேகரவின் ஊடாக இந்த நகர்தல் பத்திரத்தை தாக்கல் செய்த மனுதாரர்கள், இந்த விவகாரத்தில் தீவிரமான அவசரம் உள்ளதால், இந்த மனுவை ஜூலை 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனுவை ஜூலை 27ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் ஜூலை 06ஆம் திகதி உத்தரவிட்டது.

மேற்கண்ட பிரதிவாதிகளில் சிலர் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்றும், அதன் மூலம் மனுதாரர்கள் கோரும் தகவல்களை வழங்குவதைத் தவிர்ப்பதாகவும், அதன் விளைவாக முறையான விசாரணையைத் தடுக்கலாம் என்றும் நம்பத்தகுந்த முறையில் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, இந்த மனு எதிர்வரும் வியாழக்கிழமை (14) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள இடைக்கால நிவாரணம் நீதிமன்றத்தால் வழங்கப்படாவிட்டால், தங்களுக்கும் இலங்கையின் குடிமக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு, பாதிப்பு மற்றும் பாரபட்சம் ஏற்படும் என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர முன்னிலையாகவுள்ளார்.