ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி அறிக்கை; இனவாத ரீதியிலான பரிந்துரைகள்: முஸ்லிம்கள் கண்டனம்

🕔 July 1, 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், நேற்று முன்தினம் (29) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், தமது செயலணியின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையினை கையளித்தார்.

எட்டு அத்தியாயங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் 43 பரிந்துரைகள் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்தே ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி உருவாக்கப்பட்டதாகவும் குறித்த அறிக்கை தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசியோர் குறிப்பிடுகின்றனர்.

‘பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடும் வகையில் ஆடை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என, ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி பரிந்துரைத்துள்ளமையின் மூலம், முஸ்லிம் பெண்கள் – ‘புர்கா’ அணிவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோன்று, ‘அரசப் பணியில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களுக்கு, அவர்களின் கணவரை இழந்தால் வழங்கப்படும் ‘இத்தா’ காலத்துக்குரிய 4 மாதங்கள் 10 நாட்களைக் கொண்ட விடுமுறை இல்லாமலாக்கப்பட வேண்டும்’ எனவும் – ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமது கணவர் மரணித்தால் அல்லது விவாகரத்துச் செய்தால் – முஸ்லிம் பெண்கள் 4 மாதம் 10 நாட்கள் அந்நிய ஆண்களுடனான தொடர்புகளைத் தவிர்த்து வீட்டில் இருப்பர். அரசுப் பணியில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களுக்கு இதற்கான விடுமுறை தற்போது வழங்கப்படுகிறது.

செயலணியின் முன்னாள் உறுப்பினர் கருத்து

இந்த நிலையில், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, அந்த செயலணியின் முன்னாள் உறுப்பினர் அஸீஸ் நிஸாருத்தீன், “இந்த நாட்டில் அரை நிர்வாணமாக ஆடை அணிவதற்கு இருக்கும் உரிமை, தமது உடலை முழுமையாக மறைப்பவர்களுக்கும் உள்ளது” என்கிறார். “அரை நிர்வாணமாக ஆடை அணிபவர்களை சட்டம் எதுவும் கேட்காதபோது, புர்கா அணிவதை மட்டும் ஏன் தடைசெய்ய வேண்டும்” என அவர் கேள்வியெழுப்பியதோடு, “புர்கா என்பது தனி மனித உரிமை” எனவும் குறிப்பிடுகின்றார்.

அஸீஸ் நிஸாருத்தீன்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அஸீஸ் நிஸாருத்தீன் ராஜிநாமா செய்தார்.

“அரசுப் பணியில் இருக்கும் முஸ்லிம் பெண்களுக்கான ‘இத்தா’ கால விடுமுறையை இல்லாமல் செய்வதற்கான பரிந்துரையானது, 100% இனவாத ரீதியில் எடுக்கப்பட்ட முடிவாகும். முஸ்லிம்களை குறிவைத்து பாதக முடிவுகள் இந்த செயலணியில் எடுக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து, செயலணிக்குள்ளேயே நான் பேசியிருந்தேன். சிறுபான்மை சமூகமொன்றை இலக்கு வைத்து, இவ்வாறு நடப்பது, இந்த நாட்டில் மேலும் இனமுறுகலை ஏற்படுத்தும் எனவும் கூறியிருந்தேன்” எனவும் நிஸாருத்தீன் குறிப்பிட்டார்.

“தேசவழமைச் சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் கண்டியச் சட்டம் ஆகியவற்றை இல்லாமலாக்க வேண்டுமென ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி பரிந்துரைத்துள்ள போதும், கண்டிய சட்டத்துக்குரிய மக்களிடம் எந்தவித கருத்துக்களும் கேட்கப்படவில்லை. இதனை நான் சுட்டிக்காட்டியதோடு, அந்த மக்களிடம் கருத்துக்களைப் பெறும் பணியை எம்மிடம் ஒப்படைக்குமாறும் கேட்டிருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை”.

“பௌத்தர்களின் மிக பிரதான ஆலயமான – கண்டி தலதா மாளிகையின் ‘தியவதன நிலமே’ (பரிபாலகர்) பதவிக்குரிய நபர் வாக்கெடுப்பின் மூலமாகவே தெரிவு செய்யப்படுவார். குறிப்பிட்ட சில அதிகாரிகள் மற்றும் நபர்களுக்கு அதற்கான வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக கண்டி பிரதேச செயலாளர் பதவியை (இது அரச பதவி) வகிக்கும் நபர், ‘தியவதன நிலமே’ பதவிக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பில் கலந்து கொள்ள முடியும். அதேவேளை, அந்த வாக்களிப்பில் பெண்கள் கலந்து கொள்ள முடியாது என, அவர்களின் பாரம்பரியம் கூறுகிறது. அந்த உரிமை பெண்களுக்கு வழங்கப்படவில்லை. இதற்காகவே, கண்டி பிரதேச செயலாளர் பதவிக்கு இதுவரை எந்தவொரு பெண்ணையும் அரசு இதுவரை நியமித்ததில்லை. இதனை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி கவனத்தில் எடுத்திருக்க வேண்டும், ஆனால் அதனைச் செய்யவில்லை” என்கிறார் அஸீஸ் நிஸாருத்தீன்.

“ஒரே நாடு ஒரே சட்டம் எனும் எண்ணக்கருவானது, ‘நாட்டில் சட்டத்தை எல்லோருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துவதை’ நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, சமூகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறித்தெடுக்கும் வகையில் அமையக் கூடாது. ஏழைக்கும் – பணக்காரனுக்கும் இடையில் ஏற்படும் பிரச்னையின் போது, சட்டத்தைச் சாதகமாக்கி பணக்காரன் வெற்றி பெற்று விடுகிறான். அண்மையில் நடந்த ஆர்ப்பாட்டமொன்றின் போது, வீதியை கறுப்பு நிறம் பூசி சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, அதனைச் செய்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்தார்கள். ஒரு தடவை நாடாளுமன்றத்தில் நடந்த கைகலப்பின் போது, அங்கிருந்த பெறுமதியான ஒலிவாங்கி (மைக்) ஒன்றை எம்.பி ஒருவர் வேண்டுமேன்றே உடைத்தார். ஆனால், அவரை சட்டம் கண்டு கொள்ளவில்லை. இந்தப் பாகுபாட்டை இல்லாமல் செய்வதே ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் நோக்கமாக இருக்க வேண்டும்.”

“முஸ்லிம் நாடான கத்தாரிடம், இலங்கையின் எரிபொருள் துறை அமைச்சர் உதவி கோரி சென்றுள்ள சூழ்நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையானது புத்திசாலித்தனமற்ற செயற்பாடு” எனவும் நிஸாருத்தீன் குறிப்பிட்டார்.

உரிமைகளைப் பறிப்பதை அனுமதிக்க முடியாது

இந்த அறிக்கை குறித்து மௌலவி எம்.எப்.எம். ரஸ்மின் கருத்து தெரிவிக்கையில், “இத்தா கடமையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் சில கருத்து வேறுபாடுகள் எமக்கு உள்ளபோதும், முஸ்லிம் பெண்களுக்கு அரசு வழங்கியுள்ள ‘இத்தா’ விடுமுறை எனும் உரிமையை பறித்தெடுப்பதை அனுமதிக்க முடியாது” என்றார்.

“தொப்பி அணிவதற்கான உரிமை மறுக்கப்பட்டபோது, பிரிட்டன் வரை சென்று போராடி, எங்கள் மூதாதையர் அதனை வென்றெடுத்தார்கள். இந்த நிலையில், எங்கள் சமூகத்தின் உரிமைகளை, ஒரு செயலணியின் மூலம் பறித்தெடுப்பதை அனுமதிக்க முடியாது.”

மௌலவி ரஸ்மின்

“புர்கா அணிவது தொடர்பிலும் எமக்கு மாற்றுக் கருத்து உள்ளது. ‘இஸ்லாத்தில் முகத்திரை இல்லை’ என்பது எமது நிலைப்பாடாகும். அதனை அணிகின்றவர்களுக்கு இது தொடர்பான விளங்கங்களை வழங்கி, அவர்களாகவே அதனைக் கழற்றும்படி செய்ய வேண்டுமே தவிர, வேறுயாரும் அதனை வலுக்கட்டாயமாக தடைசெய்ய முடியாது” என்றும் அவர் கூறினார்.

முஸ்லிம் நாடுகளின் உதவிகளைத் தடுத்து விடும்

முஸ்லிம் கவுன்சில் ஆஃப் சிறிலங்கா அமைப்பின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், “முகத்தை மறைப்பதைத் தடைசெய்தல் மற்றும் இத்தா கால விடுமுறையை இல்லாமல் செய்தல் போன்றவை முஸ்லிம்களுக்கு எதிரான பரிந்துரைகளாகும்” என்றார்.

“முஸ்லிம்களின் மூதாதையர்கள் இந்த நாட்டின் ஆட்சியாளர்களுடன் பேசி, முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே மேற்படி உரிமைகள் முஸ்லிம்களுக்குக் கிடைத்தன. அவற்றினை இல்லாமலாக்குவதென்பது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிப்பதாகவே அமையும். எனவே, ஒரே நாடு ஒரே சட்டம் முன்வைத்துள்ள இவ்வாறான பரிந்துரைகளை அரசாங்கம் கவனத்தில் எடுக்காது என நம்புகிறோம்” என்றார்.

“நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், முஸ்லிம் நாடுகளின் உதவிகள் தற்போது தேவையாக உள்ளது. கத்தாருக்கு எரிபொருள் துறை அமைச்சர் சென்றுள்ளார், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விரைவில் ஜனாதிபதி செல்லவுள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் இந்தப் பரிந்துரைகள் வந்திருக்கக் கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளால்தான் முஸ்லிம் நாடுகளின் உதவிகளை இலங்கையினால் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன்

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி என்பது என்ன?

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்கிற எண்ணக்கருவை இலங்கைக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, சட்டமூலம் ஒன்றைத் தயாரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷவினால், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி உருவாக்கப்பட்டது.

இந்த செயலணியின் தலைவராக சர்ச்சைக்குரிய பௌத்த மதகுரு கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கு 6 சிங்களவர்கள், 4 முஸ்லிம்கள், 3 தமிழர்கள் என, 13 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

பின்னர் இந்த செயலணி மீதும், ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் மீதும் அதிருப்தி கொண்டு, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியிலிருந்து மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் ராஜிநாமா செய்தனர்.

1,200க்கும் அதிகமான சாட்சியங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையானது, 8 அத்தியாயங்களையும், 43 பரிந்துரைகளையும் கொண்டுள்ளது.

நன்றி: பிபிசி தமிழ்

Comments