முதுகெலும்பு இல்லாத மு.காவின் உயர் பீடம்: நாளை கூடி, என்ன செய்யப் போகிறது?

🕔 April 21, 2022

– முகம்மத் இக்பால் ( சாய்ந்தமருது) –  

முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீட கூட்டம் எதிர்வரும் 22.04.2022 இல் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்போது அமைச்சுப் பதவியெடுத்துள்ள கட்சியின் ஹாபிஸ் நசீர் உள்ளிட்ட அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து,  மு.கா. உயர்பீடத்தை ஏதோ உமர் (ரழி) அவர்களின் அரச சபை போன்றும், அங்கு நீதியும் நியாமும், உண்மையும் பிரஸ்தாபிக்கப்படும் என்பது போன்றும் சிலர் முகநூலில் எழுதி வருகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீடம் என்பது, அந்தக் கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீடைய எடுபிடிகளின் அரங்கம். அவ்வளவுதான். அதாவது தலைவரிடமிருந்து ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளவர்களும், இதுவரை காலமும் கொட்டிப் பங்கிட்டுக்கொண்டு நன்றாக உல்லாசம் அனுபவிப்பவர்களினதும் கூடாரமாகும்.

சமூக உணர்வுகளோ, சமூகம் பற்றிய தூர நோக்குகளோ, கட்சி பலமடைய வேண்டுமென்று அடிமட்ட ஆதரவாளர்கள் சிந்திப்பது போன்ற எண்ணங்களோ சிறிதளவேனும் இவர்களிடம் இல்லை. சுருக்கமாக கூறினால் வியாபாரிகள். அதாவது அரசியல் வியாபாரிகள்.

எதிர்காலத்தில் எப்படி தேர்தலில் போட்டியிடலாம், அரசியல் பதவிகளை பெறலாம், கோடி கோடியாக பணம் சம்பாதிக்கலாம், அதிகாரத்தை அடையலாம் என்ற சிந்தனையை தவிர வேறு எந்தவித சிந்தனைகளும் இவர்களிடம் உள்ளதாக நான் அறியவில்லை.  

அரசியல் நெருக்கடி நிலவுகின்ற காலங்களில் அதி உயர்பீட கூட்டம் என்று அறிவித்து, முஸ்லிம் மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்துவார்கள். பின்பு கூடி சாப்பிட்டுவிட்டு கலைந்து விடுவார்கள். முஸ்லிம் சமூகத்தினால் பாராட்டும் விதமாக தீர்க்கதரிசனமான முடிவுகள் ஏதாவது இந்த அதி உயர் பீடத்தினால் எடுக்கப்பட்ட வரலாறுகளில்லை.

அத்துடன் அங்கு தலைவரை யார் அதிகமாக புகழ்வதென்ற போட்டி நடைபெறும். இறுதியில் ‘தலைவரின் முடிவே இறுதி முடிவு. தலைவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம். அல்லாஹ் அக்பர்’ என்று கூறியதும் கூட்டம் கலைந்துவிடும்.

இதுக்குத்தானா இத்தனை எதிர்பார்ப்புக்கள் ? இத்தனை மாசாலங்கள்? பம்மாத்துக்கள் ?

அதி உயர் பீடத்துக்கு எவ்வாறு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள் ?

தலைவரிடம் அதிகமாக கெஞ்சுகிறவர்களும், காலில் விழுந்து விழுந்து அழுகின்றவர்களும், விடிந்ததும் காலை ஆறு மணிக்கு தலைவரின் இல்லத்துக்கு சென்று அல்லது தொலைபேசி மூலமாக மற்றவர்களை போட்டுக் கொடுக்கின்றவர்கள் அதாவது கோள் கூறுபவர்களும், தலைவருக்கு எதிராக பேசுகின்றவர்கள் பற்றி ஒலிப்பதிவு செய்து அனுப்புகின்றவர்களும், கத்தி கதறி கெஞ்சி, கையேந்தி இறுதியில் கண்களால் ரத்தம் வழிகின்ற தறுவாயில் அவர் தனது விசுவாசிதான் என்று தலைவரின் மனம் தீர்மானிக்கின்றபோது அவர் அதிஉயர் பீடத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்.

மாறாக முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்ற ரோசம் உள்ளவர்கள், கௌரவமானவர்கள், சமூக உணர்வாளர்கள், கட்சி தியாகிகள், அரசியல் அறிவுடையவர்கள், சிந்தனையாளர்கள், முஸ்லிம் கல்விமான்கள் போன்ற எவருக்கும் அதி உயர் பீடத்தில் இடமில்லை. இவ்வாறானவர்களை இணைத்தால் அது எதிர்காலத்தில் தலைமைத்துவத்துக்கு சவாலாகிவிடும் என்ற காரணத்தினால் அவ்வாறானவர்களுக்கு இடமில்லை.  

சுருக்கமாக கூறப்போனால் தலைவருக்காகவே கட்சி, தலைவருக்காகவே அதி உயர் பீடம் அதாவது அனைத்தும் தலைவருக்காகவே.

முதுகெலும்பும் இல்லாதவர்கள் என்று தலைப்பிட்டேன் எதற்கு ?

இதற்கு ஏராளமான சம்பவங்கள் இருக்கின்ற போதிலும் ஒன்றை மட்டும் இங்கே பதிவிடுகிறேன்:

அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் அமைச்சர் பதவிகளை ராஜினமா செய்திருந்த – கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதிக் காலத்தில், முஸ்லிம் காங்கிரஸ் எந்தவித அமைச்சு பதவிகளையும் எடுப்பதில்லை என்று அதி உயர்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவ்வாறு தீர்மானிக்கப்பட்டு மூன்றாவது நாள் தலைவர் அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டார். இது கட்சியின் தீர்மானத்துக்கு முரணானதென்று கூறுவதற்கு ஒரு உறுப்பினருக்கும் முதுகெலும்பு இருக்கவில்லை.

எனவே அதி உயர் பீடம் என்பது தலைவரின் விருப்பங்கங்களுக்கு சட்ட அந்தஸ்து வழங்குகின்ற ஓர் கும்பலின் சபையாகும்.

கட்சியை புனரமைப்பதென்றால் இந்த சபை கலைக்கப்பட்டு மறு சீரமைக்கப்படல் வேண்டும். அதாவது சமூக உணர்வாளர்கள், அரசியல் அறிவுள்ளவர்கள், சிந்தனையாளர்கள், கல்விமான்கள் போன்றோர் இணைத்துக்கொள்ளப்படல் வேண்டும் என்பது பலரது நீண்டகால கோரிக்கையாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்