
– பாறுக் ஷிஹான் –
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவறறை கேன்களுக்கு விநியோகிப்பது, இன்று முதல் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஏப்ரல் 12,13, 14 ஆகிய திகதிகளில் கேன்களில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவை கேன்களில் வழங்கப்பட மாட்டாது.
ராணுவம் மற்றும் பொலிஸாரின் கண்காணிப்புடன் மேற்படி அம்பாறை மாவட்டத்திலுள்ள பல எரிபொருள் நிலையங்களில் பொதுமக்கள் கிரமமாக பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெய் ஆகிய எரிபொருட்களை இன்று பெற்றுக்கொண்டமையை அவதானிக்க முடிந்தது
விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான டீசல், பெற்றோல் போன்றவற்றை குறித்த பிரதேசத்தின் கமநல சேவை உத்தியோகத்தர் அல்லது கிராம உத்தியோகத்தரின் சான்றிதழுடன் நிரப்பு நிலையத்தில் சமர்ப்பித்து கேன்களில் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தவிர சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து, விற்பனை செய்பவர்களை தேடி சோதனை நடவடிக்கைகளும் இன்று முன்னெடுக்கப்பட்டன.
இதன் பொது கல்முனை, பொத்துவில் பொலிஸ் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 10 சட்டவிரோத எரிபொருள் விற்பனை நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சட்டவிரோத எரிபொருள் விற்பனை தொடர்பில் தகவல்களை தந்துதவுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மக்களை கேட்டுள்ளனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே எரிபொருளைச் சேமித்து விற்பனை செய்ய அனுமதியிருப்பதால், எரிபொருளை தனியார் சேமித்து வைத்திருப்பதும் விற்பனை செய்வதும் சட்டவிரோதமானது என பொலிஸார் தெரிவித்தனர்.
கேன்கள், பீப்பாய்கள், போத்தல்கள் மற்றும் ஏனைய கொள்கலன்களில் பொதுமக்கள் எரிபொருளை கொள்வனவு செய்வது அவதானிக்கப்பட்டுள்ளதுடன், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் திட்டமிடப்பட்ட மின்வெட்டு காரணமாக அதிகாரிகள் இந்த விடயத்தில் கவனமெக்காமையின் காரணமாக பலர் இந்த மெத்தனத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர். இது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மாறியுள்ளது.
அத்தகைய நபர்கள் அதிக லாபம் ஈட்டும் வகையில் எரிபொருளை மீண்டும் விற்பனை செய்கின்றனர்.
இதனால் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக எரிபொருள் வரிசையில் நிற்பவர்கள் இவ்வாறான செயற்பாடுகளால் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே பொதுமக்களின் தேவைக்கு போதுமான எரிபொருளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
இருந்தபோதிலும் தேவையான அளவு கேன்கள் மற்றும் போத்தல்களில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் ஒரு லீட்டர் 254 ரூபா விற்கப்படும் நிலையில், சில தனியார் ஒரு போத்தல் பெற்றோலினை 350 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.




