ஊடகவியலாளர் சமுதித்த வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலை கேலி செய்து, அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன் பேஸ்புக் பதிவு

🕔 February 15, 2022

டகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கேலி செய்யும் வகையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன் ‘பேஸ்புக்’கில் பதிவொன்றை இட்டதாக ‘ஏசியன் மிரர்’ ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன் சசித்திர வீரசேகர பொலிஸ் துறையில் வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார்.

பிரபல தொலைக்காட்சி ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீடு மீது நேற்று அதிகாலை கல் மற்றும் மலக் கழிவு ஆகியவற்றைக் கொண்டு, அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இச் சம்பவத்தை கேலி செய்யும் வகையிலேயே சரத் வீரசேகரவின் மகன் பதிவொன்றை இட்டிருந்தார்.

அந்தப் பதிவில்; ‘கல்லையும் மலத்தையும் அவமதித்தவர்களைக் கண்டிப்போம்’ என சசித்ர குறிப்பிட்டிருந்தார்.

ஊடகவியலாளர் சமுதித்தவின் வீடு மீதான தாக்குதல் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கவலைகளையும், கண்டனங்களையும் வெளியிட்டு வரும் நிலையில், பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சரின் மகன், இவ்வாறானதொரு பதிவை இட்டிருந்தார்.

ஊடகவியலாளர் சமுதித்தவின் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸாருக்கு மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் மகன் இந்த பதிவை இட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன் சசித்திர, தனது பேஸ்புக் பதிவை பின்னர் நீக்கியுள்ளார் எனவும், ‘ஏசியன் மிரர்’ குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்