சீனாவிடமிருந்து 100 கோடி கிலோகிராம் அரிசி இலவசமாகக் கிடைக்கிறது: அமைச்சர் பந்துல தெரிவிப்பு

இலங்கைக்கு 01 மில்லியன் மெற்றிக் தொன் (100 கோடி கிலோகிராம்) அரிசியை, அன்பளிப்பாக சீனா வழங்கவுள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (19) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் இந்த அரிசி கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ரப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த அரிசித் தொகை வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் குறித்த அரிசி இலங்கைக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இம்மாதம் 10ஆம் திகதி, சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, வரலாற்று சிறப்புமிக்க ரப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழாவை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
இந்த விஜயத்தின் போது, 1952 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ரப்பர் – அரிசி ஒப்பந்தம், இருதரப்பு உறவுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதென அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.