இருவேறு துருவங்களுக்குள் இஷாலினியின் கதை

🕔 November 12, 2021

– என். முஹம்மது சப்னாஸ் –

செய்தி சொல்லப்படும் முறையால் மக்கள் இரு துருமாகி நிற்கிறார்கள்|ரிஷாட் பதியுதீன் – இசாலினி| சொன்ன செய்திகள் என்ன?

நவீனத்துவ சமூகமானது தகவலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இன்றைய மக்கள் தகவல்களை தேடுபவர்களாக மட்டுமல்லாது அதனை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவும் கருதுகின்றனர். ஒரு விடயம் சார்ந்து மக்கள் எவ்வாறான தகவல்களைப் பெறுகிறார்களோ அதன் அடிப்படையில் அவர்கள் அந்த விடயம் தொடர்பில் தமது சொந்தக்கருத்துக்களை உருவாக்கிக்கொள்கின்றனர். இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் முக்கியமாகின்றன. இந்தத்ததகவல்களைப் பெறுவதற்கு மக்கள் பெரும்பாலும் நம்பி இருப்பது ஊடகங்களைத்தான். அவ்வாறு ஊடகங்களினூடாகச் செய்திகளைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் ஏன் துருவப்படுத்தப்படுகிறார்கள்?

அதாவது ஒரே இடத்தில் வாழும் மக்கள் வெவ்வேறு திசைகளில் துருவப்படுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் தமது உணர்வின் அடிப்படையில் பக்கம் சார்ந்து செயற்படும் நிலையை, ஊடகங்கள் மேலும் கூர்மையாக்குகின்றனவா? என எண்ணவைக்கும் அளவிற்கு செய்திகள் வெளிவருகின்றன. செய்திகளினூடக மக்கள் எவ்வாறு துருவப்படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிய ஒரு செய்தியை உதாரணமாக எடுத்தோம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட்  பதியுதீனின் கொழும்பு வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தவர் எரியுண்டநிலையில் இறந்த விடயம் கடந்த ஜூலையில் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளிவந்தன. இது தொடர்பாக கடந்த ஜூலை 17 தொடக்கம் ஓகஸ்ட் 03 வரையான காலப்பகுதியில் வீரகேசரி, தினகரன், திவயின, லங்காதீப ஆகிய பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளை பகுப்பாய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

அதன்படி 15ஆம் திகதி சம்பவம் நடைபெற்றது. 17 ஆம் திகதி வீரகேசரியில் ‘ரிஷாத்தின் வீட்டில் வேலைசெய்த சிறுமியின் மரணம்: விசாரணையில்  திருப்பம்’ என்று தலைப்பிட்டு; “ஜூட் குமார் ஹிஷாலினி எனும்  16 வயது சிறுமி உடலில் தீ பரவி பலத்த காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா, அவர் வீட்டு வேலைக்காக சேர்க்கப்படும் போது 16 வயதை பூர்த்தி செய்திருந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன” என்றவாறு செய்தி எழுதப்பட்டிருந்தது.

தினகரன் பத்திரிகையில் ‘ரிஷாத்தின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி: எரிகாயங்களுடன் உயிரிழந்துள்ளமை குறித்து தீவிர விசாரணை – பொலிஸ்; பேச்சாளர் அஜித் ரோஹண தகவல்’ என தலைப்பிட்டிருந்தது. ‘சிறுமி தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது’ என பொலீசாரை மேற்கோள் காட்டி செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்த இரு செய்திகளையும் வாசிக்கும் வாசகர்களுக்கு சிறுமியின் மரணத்தில் சந்தேகம் ஏற்படுவதைவிட, அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட விடயம்தான் பிரதானமாக தெரியும். இது தற்கொலை என்ற பொலிசாரின் அறிவிப்பும் நாட்பட்ட துஸ்பியோகம் நடந்துள்ளது என்ற வைத்தியரின் அறிக்கையும் மக்களுக்கு ஒரு மர்மமான விடயத்தை முன்வைப்பதாக இருக்கிறது. துஷபிரயோகம் எங்கே எப்போது நடந்திருக்கும் என மக்களை ஆர்வமூட்டும் வகையில் செய்தி அறிக்கையிடப்பட்டிருந்தது.

திவயின  பத்திரிகையில் ‘ரிஷாத்தின் வீட்டில் தீ வைத்த பணிப்பெண்: சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்’ என்று பெரிய தலைப்புச்செய்தி எழுதப்பட்டு  ‘குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாத்திடம் வாக்குமூலம் பெற முயற்சி’ என்ற குறிப்பும் போடப்பட்டிருந்தது. ‘மனைவி, பெற்றோர் மற்றும் வேலைக்கார  இளைஞன் ஒருவரிடமும் பொலிஸார் விசாரிக்கின்றனர்’ என்பதும் தலைப்பில் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த செய்தியை வாசிக்கும்போது, சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உள்ளான விடயம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ரிஷாத்தி பதியுதீன் பற்றி சொல்வதும், அவரின் குடும்பம் இதில் சம்பந்தப்பட்டுள்ளதை முன்வைப்பதும் என்பதை உணரமுடிகிறது. ரிஷாத் பற்றியும் அவரின் குடும்பம் பற்றியும் எதிர்மறைக் கருத்தை உருவாக்கும் வகையில் இந்தச் செய்தி கட்டமைக்கப்பட்டிருந்தது.

அதை அடுத்து ஜூலை 20 ஆம் திகதி ‘ரிஷாத் பதியுதீன் வீட்டில் மேலும் கூடுதலாக பெண்கள் இருவர் மரணம்’ என, மிக முக்கியத்துவம் கொடுத்த செய்தி ஒன்று – பத்திரிகையின் தலைப்புக்கு அருகில் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது.  மற்றும் திவயின  பத்திரிகையில் 24ஆம் திகதி, முதல்பக்க தலைப்புச் செய்தியாக ‘பதியுதீன் வீட்டில் இளைஞர்கள் 11பேருக்கு கடுமையான சித்திரவதை’ என தலைப்பிட்டு, ‘சிலர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர், ஒருபெண் ரயிலில் குதித்தாள், அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்துள் முறைகேடு, எரிந்து இறந்த சிறுமி ஒரு இருட்டு அறையுள் இருந்தாள்……….’ இவ்வாறு ஒரு நாள் செய்தியில் பல விடயங்களை மிகப்பெரிய எழுத்தில் தலைப்பு செய்தியாக பிரசுரித்திருந்தது.

இவற்றை வாசிக்கும்போது முன்னாள் அமைச்சர் ரிஷாத்மீதும் அவரின் குடும்பத்தின் மீதும் எதிர்மறையான எண்ணங்கள், மக்கள் மனதில் தோன்றுவது தவிர்க்கமுடியாததாகவே இருந்தது. அவர் ஒரு அரசியல் பிரமுகராக இருப்பதும் அவரை முக்கியத்துவப்படுத்துவதற்கான காரணமாக இருக்கலாம். ஆனாலும் இந்த செய்திகளை வாசிப்பவர் மனதில் எதிர்மறை எண்ணம் தோன்றும் அளவில் செய்திகளைக் கட்டமைத்ததும் பிரதானப்படுத்தி தொடர்ந்து வெளியிட்டதும் இந்தச் செய்தி வாசிக்கும் மக்களை, இஸ்லாமிய மக்களிடம் இருந்து தூரப்படுத்தியே வைத்திருக்கும். இது ஒரு துருவப்படுத்தல் நிலைதான்.

தமிழ் பத்திரிகைகளில் இதே செய்தி உள்பக்க செய்தியாக வந்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. வீரகேசரியில் ‘மற்றொரு பெண்ணும் துஷ்பிரயோகம். ஹிஷாலினி உட்பட மூன்று பெண்கள் உயிரிழப்பு. ரிஷாத்தின் மைத்துனரிடம் விசாரனை என்கிறார் பொலிஸ் பேச்சாளர்’ என்பதாக செய்தி மூலத்தை மேற்கோள் காட்டியே ஒவ்வொன்றையும் முன்வைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. ‘உயிரிழந்த சிறுமி உள்ளடங்கலாக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் டயகம பிரதேசத்தில் 11 பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஹிஷாலிணி உள்ளடங்கலாக மூவர் உயிரிழந்துள்ளனர். ஹிஷாலிணி தவிர்ந்த ஏனைய இருவரில் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளதுடன் பிறிதொருவர் குறித்த வீட்டில் இருந்து சென்ற பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்கள் தவிர்ந்த ஏனைய 08 பேர்களின் வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன’ என்ற செய்தி விவரிக்கப்பட்டிருந்தது.

இவற்றை வாசிப்போர் பெறும் மனநிலையை சிங்களச் செய்தியை வாசிப்போர் பெறமாட்டார்கள். சிங்களச் செய்தியை வாசிக்கும் மக்கள் உணர்வுநிலைப்பட்டு இஸ்லாமிய மக்கள் மீது, வெறுப்புணர்வை உருவாக்கிக்கொள்ளும் ஆபத்தும் அதில் இருந்தது. ஏனெனில் தொடர்ந்து திவயின பத்திரிகையில் ரிஷாத் பதியுதீன் மற்றம் இஷாலினி பற்றிய செய்திகள் முதற்பக்க, தலைப்பு செய்திகளாக வெளிவந்திருந்தன.

17 தொடக்கம் ஓகஸ்ட் 3 காலத்துக்குள்16 நாட்களில் ஜூலை18, ஓகஸ்ட் 3 தவிர்ந்து மீதமுள்ள 13 நாட்களிலும் முன்பக்க, தலைப்பு செய்தியாகவும், ஓகஸ்ட் 2 ஆம் திகதி மூன்றாம் பக்கத்திலும் பிரசுரமாகியுள்ளது. அதேபோல் லங்கா தீப பத்திரிகையில்  குறிப்பிட்ட காலப்பகுதிற்குள் 17,19,21,23,28,29 தவிர்ந்த 11 நாட்களில் தலைப்பு, முன்பக்க செய்திகளாக வெளிவந்துள்ளது.

ஒரு பத்திரிகையின் தலைப்புச் செய்தியை தீர்மானிக்கும் செய்தித் பெறுமானங்கள் பல உள்ளன. அவை வாசக நோக்கையும் கவனத்தில் எடுத்து தீர்மானிக்கப்படுவன. பெரும்பாலும் தமிழ் பேசும் சமூகத்துள் நடக்கும் பல விடயங்கள் சிங்கள சமூத்தின் மத்தியில் கொண்டு செல்லப்படுவதில்லை. அதேபோல் சிங்கள சமூகத்துள் நடக்கும் பல விடயங்கள் தமிழ் சமூகத்துள் கொண்டுவரப்படுவதும் இல்லை. இந்த நிலையில் இந்தச் செய்தி 13 நாட்கள் சிங்களப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததா? அது ஏன்? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது.

ஒரு சிறுமியின் இழப்புக்கு நீதி கோரி மக்களையும் அத்தகைய நிலையில் வைத்திருப்பதற்கு இது எழுதப்பட்டதா என்றால், ‘இல்லை’ என்றே பதில் கிடைக்கும். நீதிக்கு அப்பால் மக்களின் மனதில் இஸ்லாமிய சமூகம் பற்றிய அல்லது ரிஷாத் பற்றிய கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதும் அதை நிலைக்கச் செய்வதும்தான் முக்கியமாக இருந்திருக்கிறது. இவற்றை வாசிக்கும் மக்களை இந்த மனநிலையில் வைத்திருப்பதும் அதிலே நீடித்து நிலைத்திருக்கச் செய்வதும் முக்கியமானதாக இருந்தது. அத்தனை பிரதான தலைப்புச் செய்திகளும் ரிஷாத்தை முன்னிறுத்தியே வெளியிடப்பட்டமை இங்கே கவனத்துக்குரியது.

அதே நேரம் தமிழ் செய்திகளை வாசித்த மக்கள், உத்தியோகபூர்வ செய்தி மூலங்கள் மூலம் – நடப்பதை தெரிந்துகொள்ளும் அதே நேரம், ரிஷாத் சார்பில் வெளியிடப்பட்ட அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்களின் அபிப்பிராயங்களையும் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருந்தனர். சிங்கள் மக்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனால் இந்த செய்தி வெளியிட்ட முறையால் ஒரு பிரிவு மக்கள் – ரிஷாத் பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் எதிர் எண்ணங்களைக் கொண்டிருந்தனர். இன்னொரு குழு மக்கள் நீதியை எதிர்பார்த்து இருந்தனர். அது சிறுமிக்கான நீதியாகவும் ரிஷாத்துக்கான நீதியாகவும் கூட பிரிந்து நின்றது. இவ்வாறு மக்களை செய்திகளினூடாக துருவங்களாக ஆக்கும் நிலையை எம்மால் உணர முடிந்தது.

அரசியல் செய்வதைக் காணக்கூடியதாக உள்ளது: சட்டத்தரணியின் பார்வை

இதனடிப்படையில் இவ் விடயம் தொடர்பாக  வழக்கறிஞர் பஹீஜ் மீரா முஹைதீன் கருத்து தெரிவிக்கையில்; “ஹிஷாலினி பிரச்சினையின் முடிவு மக்களினாலும், நீதிமன்றத்தினாலுமே எடுக்கப்பட வேண்டும். இதுவே யதார்த்தமும் உண்மையுமாகும். நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு எனப்படுவது, ஒரு வெளிப்படையான விடயமாகும். இங்கு நடந்ததை நடந்தவாறே கூறும் சுதந்திரம் ஊடகங்களுக்கு உண்டு. ஆனால் மேலதிகமாக கருத்து தெரிவிக்கும் போது – கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு சம்பவம் தொடர்பாக ஒரு செய்தி வழங்கப்படுமானால், அது எல்லா மொழிகளிலும் ஒரே விதமான அர்த்தங்களிலேயே காட்சிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஹிசாலினியின் வழக்கு தொடர்பான செய்திக்கான அர்த்தங்கள் மொழிக்கு மொழி வேறுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இதனால் நீதிமன்றத்தில் ஒருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட முன்னரே மக்களில் ஒரு குழுவினரின் மனதில் அவர் குற்றவாளியாக்கப்படுகிறார். இன்னொரு குழுவினருக்கு வேறுவிதமாக கட்டப்படுகிறது”.

“மேலும் இந்த ஹிஷாலினியின் வழக்கில், ஒரு சமூக தலைவர் சம்பந்தப்படுவதால் ஒவ்வொரு சமூகமும் தங்களது சமூத்துக்கு சாதகமான  விதத்தில் கருத்துகளை தெரிவிப்பதையும் அதனூடாக அரசியல் செய்வதையும் இந்த வழக்கில் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான திரிபுபடுத்தப்பட்ட செய்திகளால் மக்கள் பிளவுண்டு முரண்பாட்டை உருவாக்கும் நிலைகளும் ஏற்படலாம்” என்றார் . 

வாசகர் விருப்புக்கு ஏற்றவாறு செய்திகளை வழங்கக் கூடாது

இவ் விடயம் தொடர்பாக,  இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ். அமீன் ஹூசைன் கருத்து தெரிவிக்கையில்; “பொதுவாக இலங்கையில் மும்மொழி ஊடகங்களை அவதானிக்க முடியும். ஆனால் இம் மும்மொழி ஊடகங்களிலும் ஒரு செய்தி – ஒரே விதமாக வெளிப்படுத்தப்படுவதில்லை. இதற்கு காரணம் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய ஒவ்வொரு மொழியும் தங்களுக்கென தனித்துவமான எடுகோள்களை கொண்டிருப்பதாகும்”.

“தமிழ் ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் சிங்கள ஊடகங்களிலோ, ஆங்கில ஊடகங்களிலோ அதே பாணியில் பிரசுரமாவதில்லை. சில வேளைகளில் தமிழ் ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் சிங்கள ஊடகங்களில் பிரசுரமாவதே இல்லை. ஏனெனில் தமிழ் பத்திரிகைகள் – தமிழ் பேசும் மக்களின் செய்திகளை வழங்குவதற்கே ஆர்வம் காட்டும். அதேபோல் சிங்கள பத்திரிகைகள் சிங்கள மக்களின் செய்திகளை வழங்குவதையே ஆர்வம் காட்டும். அதே நேரம் பொதுவான செய்தி ஒன்று வருகின்றபோது அவற்றை தமது வாசகர்களுக்கு ஏற்றவாறு திருப்பும் சந்தர்ப்பத்தில் துருவப்படுத்தல் நடந்தேறுகிறது. ஆனாலும் செய்தியானது எக் காரணத்திற்காகவும் திரிபு படுத்தப்படக்கூடாது”.

தகவல் ஒன்று – ஊடகத்தின் ஆர்வத்துக்கு ஏற்ப திரிபுபடுத்தபட்டதாக வெளியாகும் போது, மக்கள் தவறான வழிக்கு இட்டுச் செல்லப்படுகின்றனர். இதனால் நாட்டிலும் சமூகத்திலும் பாரிய பிரச்சினைகள் ஏற்படலாம். குறிப்பாக இன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதற்காக சந்தரப்பம் அதிகம்”.

“ஆகவே எந்த காரணம் கொண்டும் செய்தி திரிபடையக் கூடாது. செய்தி எழுதுபவரின் கருத்து கூட செல்வாக்கு செலுத்தக் கூடாது. அது மக்களை வேறு வேறு திசைகளில் துருவப்படுத்தும். அந்த துருவப்படுத்தலால் மக்களிடையே இருக்கவேண்டிய இணக்கப்பாடு குலையும். செய்திகள் – அரசியல் நோக்கத்துக்காகவும், அரசியல்வாதிகளின் பின்புலத்திலும் வெளிவரக் கூடாது. தமது வாசகர்களின்  விருப்புக்கு  ஏற்றவாறு செய்திகளை வெளியாக்க கூடாது. ஒரு பிரச்சினையை செய்தியாக கூறும் போது, இரு தரப்பு வாதங்களையும் குறிப்பிட வேண்டும். அதுவே மக்களை இணைக்கும் வழியாகும்” என்றார்.

(இந்தக் கட்டுரை, ‘இலங்கை ஊடகங்களின் துருவப்படுத்தல்’ எனும் தலைப்பில் இன்ரநியுஸ் நிறுவனம் நடத்திய செய்தி ஆய்வுப் பயிற்சியினைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் அனுசரணையில் எழுதப்பட்டது)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்