“காலணிகளை அணியவும் அனுமதிக்கப்படவில்லை”: ஆப்கான் ஜனாதிபதி ஐக்கிய அமீரகத்திலிருந்து தெரிவிப்பு

🕔 August 19, 2021

ப்கானிஸ்தானிலிருந்து தான் தப்பியோடவில்லை என்றும் தனது பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்டு வந்தனர் என்றும், அந்த நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.

“எனது காலணிகளை அணிந்து கொள்ளக்கூட அனுமதி வழங்கப்படவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

அவரது பேச்சு ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் தோன்றி இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைத்து விட்டதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அஷ்ரப் கனியையும் அவரது குடும்பத்தையும் வரவேற்றுத் தஞ்சமளித்திருப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சு அறிவித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலை தாலிபன்கள் முற்றுகையிடும்போதே ஜனாதிபதி அஷ்ரப் கனி தப்பிச் சென்றுவிட்ட தகவல் பரவத் தொடங்கியது. பணம் நிரப்பப்பட்ட கார்களில் அவர் தப்பியதாகவும் செய்திகள் உலவின.

நாடு நெருக்கடியில் இருக்கும்போது அஷ்ரப் கனி தப்பிச் சென்றமைக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. 20 ஆண்டுகள் போரை நடத்திய அமெரிக்காவும் இதைக் கண்டித்திருக்கிறது. தலிபான்களின் வெற்றிக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியும், படைகளுமே காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ படைன் வழங்கியுள்ள பேட்டியில் அஷ்ரப் கனியை விமர்சித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி இனி முக்கிய நபராக கருதப்பட மாட்டார் என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் வென்டி ஷெர்மன் கூறினார்.

உள்நாட்டு அரசியல்வாதிகளும் அஷ்ரப் கனியின் செயலைக் கடுமையாகக் கண்டித்தனர். “கடவுள் அவரைப் பொறுப்பாக்குவார். நாடு அவருக்கு உரிய தீர்ப்பை வழங்கும்” என தேசிய நல்லிணக்கக் குழுவின் தலைவர் அப்துல்லா கூறியுள்ளார்.

நாட்டில் இருந்து 169 மில்லியன் டொலர் (இலங்கைப் பணத்தில் சுமார் 3192 கோடி ரூபா) பணத்தை அவர் எடுத்துக் கொண்டு சென்றதாக ஆப்கானிஸ்தானுக்கான தஜிகிஸ்தான் நாட்டுத் தூதர் முகமது சாகிர் அக்பர் குற்றம்சாட்டினார்.

அஷ்ரப் கனி விளக்கம்

இந்த நிலையில் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு அஷ்ரப் கனி பதில் அளித்திருக்கிறார். “நெருக்கடியில் இருந்து நாடு மீள வேண்டும். ரத்தக்களறி தவிர்க்கப்பட வேண்டும்” என்பதுதான் தமது நோக்கம் என்று அவர் கூறியுள்ளார்.

பெரும் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியதாக பரவும் தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தாம் தப்பியோடவில்லை என்றும் தமது பாதுகாப்பு அதிகாரிகள் தம்மை ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்டு வந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

“எனது காலணிகளை அணிந்து கொள்ளக்கூட அனுமதி வழங்கப்படவில்லை” என்றும் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.

“நிகழ்வுகள் மிக வேகமாக நடந்தன. தலிபான்களுடன் பேச்சு நடத்தி அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைக்கவே நான் விரும்பினேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனி எத்தனை விளக்கத்தைக் கொடுத்தாலும், எல்லையில் தலிபான்கள் முகாமிட்டிருக்கும்போது, குடிமக்களை அவர்களிடம் விட்டுவிட்டு நாட்டை விட்டுத் தப்பிச் சென்றமைக்கு இன்னும் வலுவான காரணங்கள் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

ஏனென்றால் 1990களில் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டபோது, அப்போதைய ஜனாதிபதி முகமது நஜிபுல்லா சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அப்படியொரு நிலைமை ஏற்படலாம் என்று கனி அஞ்சியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்