அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் கலவரம்; ட்ரம்ப் ஆதரவாளர்கள் அடாவடி: நால்வர் பலி

🕔 January 7, 2021

மெரிக்க நாடாளுமன்றம் கூடும் கெப்பிடல் கட்டடத்துக்கு வெளியேயும், உள்ளேயும் மிகப் பெரும் கலவரம் இடம்பெற்றது. ஜனாதிபதி டிரம்ப்யினுடைய ஆதரவாளர்கள் இந்த கலவரத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த நிலையில் இந்தக் கலவரம் நடந்துள்ளது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வி அடைந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள மறுத்துவரும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இந்த வெற்றியை ஏற்று சான்றிதழ் தராமல் – தேர்தல் முடிவுகளை நிராகரிக்கும்படி துணை ஜனாதிபதி மைக் பென்சை வலியுறுத்தி வருகிறார்.

இந் நிலையில், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அப்போது டிரம்ப் ஆதரவு கலவரக் கும்பல் நாடாளுமன்றத்தில் புகுந்தது.

சில கலவரக்காரரர்கள் கட்டடதட்தின் பக்கச் சுவற்றைப் பிடித்து ஏறிச் சென்று நாடாளுமன்ற செனட் அவைக்குள் நுழைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவைத் தலைவர் நான்சி பெலோசி அலுவலகத்திலும் கலவரக்காரர் ஒருவர் புகுந்ததைக் காட்டும் படம் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முதலில் தேர்தல் சபை உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பிறகு அவர்கள் ஜனாதிபதியைத் தேர்வு செய்ய வாக்களிப்பார்கள்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இப்படி தேர்தல் சபை உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை டிசம்பர் 14ம் திகதி செலுத்தி அவற்றை சீலிட்ட கவர்களில் அனுப்பிவைத்தனர். அந்த வாக்குகள் புராதன மகாகனி மரப்பெட்டிகளில் வைத்து கெப்பிட்டல் கட்டடத்துக்கு றே்று புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டது.

அந்த வாக்குகளை அமெரிக்க நாடாளுமன்றத்தில் எண்ணும் பணி நடந்து கொண்டிருந்த நிலையில் இந்தக் கலவரம் நடந்துள்ளது. வாக்குகளை எண்ணி முடித்து பைடனின் வெற்றியை அங்கீகரித்து நாடாளுமன்றம் சான்றிதழ் அளிக்கவேண்டும்.

இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிசாரால் வெளியேற்றப்பட்டனர்.

எனினும் இந்த வாக்குச் சீட்டுகள் காப்பாற்றப்பட்டதாக ஒரு செனட் உறுப்பினர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக இந்த வாக்குச் சீட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு ஓராண்டு காலத்துக்கு பொதுமக்கள் விரும்பினால் சரிபார்ப்பதற்காக ஃபெடரல் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

இந்தக் கலவரத்தில் ஊடகங்களும் தாக்கப்பட்டன.

இந்தக் கலவரைத்தை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கலவரத்தை தொடர்ந்து தனது ஆதரவாளர்களைத் திரும்பிப் போகும்படி டிரம்ப் வேண்டுகோள் விடுக்கும் வீடியோவை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அகற்றியுள்ளன. அந்த வீடியோவில் ஆதரவாளர்களை திரும்பிப் போகச் சொல்லும் அதே நேரம், அவர் தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக ஆதாரமில்லாமல் மீண்டும் குற்றம்சாட்டினார்.

டிவிட்டர் – டிரம்பின் கணக்கை 12 மணி நேரத்துக்கு முடக்கி வைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியும் டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான ஜோர்ஜ் புஷ் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார்.

இந்தக் கலவரத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை இரவே மீண்டும் தேர்தல் சபை வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்றத்தில் தொடரும் என்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைத் தலைவர் நான்சி பெலோசி தெரிவித்தார்.

தலைநகரில் 2,700 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து கலவரக்காரர்கள் கலைந்து சென்றனர்.

டிரம்பின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் இந்தக் கலவரத்தை எதிர்த்தும், பைடனின் வெற்றியை ஆதரித்தும் பேசத் தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் டிரம்ப் பேசி வந்ததால்தான் கலவரம் வெடித்ததாக பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் அவரை பதவியில் இருந்து நீக்க அரசியலமைப்புச் சட்டத்தில் வழி இருப்பதாகவும், அதை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழத் தொடங்கிவிட்டன. அந்த சட்டப் பிரிவுக்கு 25வது திருத்தம் என்று பெயர்.

டிரம்பின் அமைச்சரவைக்குள்ளேயே இந்த சட்டத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து முனுமுனுப்புகள் தொடங்கியுள்ளன என்று சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த 25-வது திருத்தத்தின் படி, ஜனாதிபதிக்கு அவரது கடமையை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டால் அவரது பொறுப்புகள் வேறொருவருக்கு மாற்றப்படலாம்.

தற்போதைய நிலையில், முக்கிய அமைச்சரவை உறுப்பினர்கள், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், ஆகியோர், ‘டிரம்ப் தகுதியோடு இல்லை என்பதால் மைக் பென்ஸ் பதில் ஜனாதிபதிஆகிறார் என்று நாடாளுமன்றத் தலைவர்களுக்கு கடிதம் எழுதித்தான் இதைச் செய்ய வேண்டும்.

1967ம் ஆண்டு கொண்டுவரப்பட்டதில் இருந்து இந்த சட்டத் திருத்தம் ஒரு முறைகூட பயன்படுத்தப்பட்டதில்லை.

ஆனால், இதுவரை இதற்கான கோரிக்கை துணை ஜனாதிபதி மைக் பென்சிடம் முறைப்படியாக சமர்ப்பிக்கப்படவில்லை.

வெர்மான்ட் மாகான குடியரசுக் கட்சி ஆளுநர், தேசிய உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் மைக் பென்சை சந்தித்து இந்தப் பிரிவை பயன்படுத்தும்படி கோரியுள்ளனர்.

அண்டை நாடான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்கள் இதனை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறி கண்டித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்