பாலமுனை வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை அனுமதிக்கக் கூடாது: அரச தரப்பு ஆவணங்களை அரசுக்கு எதிராக மாற்றி, அக்கரைப்பற்று நீதிமன்றில் வழக்கு

🕔 December 21, 2020

– முன்ஸிப் அஹமட் –

ம்பாறை மாவட்டம் – பாலமுனை பிரதேச வைத்தியாலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நோயாளர்களின் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பொறிமுறை உருவாக்கப்படும் வரை, கொரோனா நோயாளிகளை அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கக் கூடாது என்ற கட்டளையைப் பிறப்பிக்குமாறு கோரியும், பாமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில உள்ளிட் ஐவர் தாக்கல் செய்திருந்த பொதுத் தொல்லை வழக்கு இன்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்குத் தொடுநர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், சட்டத்தரணி யூ.எல். வசீம் மற்றும் குரல்கள் இயக்கத்தின் சார்பாக சட்டத்தரணி எம்.எம். ரதீப் அஹமட் ஆகியோர் ஆஜராகினர்.

கொரோனா காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக, உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு – விசாணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் அண்மையில் நிராகரிக்கப்பட்டமை அறிந்ததே.

இந்த நிலையில் அந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள்; ‘கொரோனாவினால் மரணிப்பவர்களைப் புதைப்பதனால் நிலத்தடி நீர் பாதிக்கும்’ என்று உறுதிப்படுத்தும் 10 நிபுணர்களின் பிரமாணப் பத்திரங்களை அரச தரப்பு சார்பாக தாக்கல் செய்திருந்தனர்.

அந்த நிபுணர்களின் அறிக்கையில்; கொரோனா நோயாளர்களின் உடற்கழிவுகள் – நிலத்தடி நீரைப்பாதிக்கின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நிபுணர்களின் பிரமாணப் பத்திரங்களை அடிப்படையாக வைத்தே, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதாவது பாலமுனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளர்களின் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கும் என்றும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பொறிமுறை உருவாக்கப்படும் வரை, கொரோனா நோயாளிகளை பாலமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கக் கூடாது என்ற கட்டளையைப் பிறப்பிக்குமாறு கோரியும், மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா, வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்