உலகில் அதிக காலம் பிரதமராக பதவி வகித்த, கலிஃபா பின் சல்மான் மரணம்

🕔 November 12, 2020

ஹ்ரைன் பிரதமர் இளவரசர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா தனது 84 ஆவது வயதில் மரணம் நேற்று மரணமடைந்தார்.

உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இவர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பஹ்ரைன் சுதந்திரம் அடைந்த பின்பு 1971ஆம் ஆண்டு – நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற இளவரசர் கலிஃபா, அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

பஹ்ரைன் மன்னர் ஹமாதின் உறவினரான பிரதமர் கலிஃபா, அந்நாட்டு அரச குடும்பத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒருவராக இருந்தார்.

2011ஆம் ஆண்டு அரபு வசந்தம் என்று அழைக்கப்பட்ட போராட்டங்கள் அரபு நாடுகளில் நிகழ்ந்த பொழுது, ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டக்காரர்களால் இளவரசர் கலிஃபா பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அரபு வசந்தம் ‘மரணங்கள் குழப்பங்கள் மற்றும் பேரழிவு’ ஆகியவற்றையே கொண்டு வந்ததாக அவர் அப்போது தெரிவித்திருந்தார்.

சிறுபான்மையினரான சுன்னி இன முஸ்லிம்கள் ஆட்சியிலிருக்கும் பஹ்ரைன், அரபு வசந்தம் நடந்த நாட்களிலிருந்து ஷியா பெரும்பான்மை முஸ்லிம்களின் போராட்டங்களை சந்தித்து வருகிறது.

ஆட்சியிலிருக்கும் சுன்னி முஸ்லிம்கள் தங்களை பாகுபாடுகளுக்கு உள்படுத்துவதாக ஷியா முஸ்லிம்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Comments