அக்கரைப்பற்றில் சிக்கிய ஹெரோயின் வியாபாரிகள்; வலை விரித்துப் பிடித்த அஸீம் குழு: தொடரும் அதிரடி

🕔 September 23, 2020

– மப்றூக் –

ம்பாறை மாவட்டத்தில் ஒரே தடவையில் அதிகளவான ஹெரோயின் போதைப் பொருளை அண்மையில் அக்கரைப்பற்று பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். இதன்போது இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புபட்ட – போதைப்பொருள் வியாபாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

இந்த அதிரடி நடவடிக்கையின் போது, அக்கரைப்பற்று பிரதேசத்தில் அதிகளவில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய நபரும் சிக்கியமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களில் ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து ஹெரோயின் வியாபாரம் இப்பிரதேசங்களில் இடம்பெறுவதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் கூறுகின்றனர்.

இவ்வாறான நிலையில்தான் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய நபரையும் அவருடன் தொடர்புபட்ட ஒருவரையும் அக்கரைப்பற்றில் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் சிக்கிய அதிகளவு ஹெரோயின்

இந்த நடவடிக்கையின் போது 122 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட அதிகளவு ஹெரோயின் இதுவாகும் எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலுக்கு இணங்க பெருங்குற்றப் பிரிவு உப பொலிஸ் பரிசோகர் ஏ.எல்.எம். அஸீம், பொலிஸ் சார்ஜன் ஜயசுந்தர, பொலிஸ் உத்தியோகத்தர் ஆர்.பி. ரஜீவன் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜலீல் ஆகியோர் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு 122 கிராம் ஹெரோயின் போதைப் பொருளைக் கைப்பற்றியதோடு, சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

உப பொலிஸ் பரிசோதகர் அஸீம் குழுவினரின் அதிரடி

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து, களத்தில் இறங்கிய பெருங்குற்றப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் அஸீம் தலைமையிலான குழுவினர், கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமையன்று பிற்பகல் 2.20 மணிக்கு, அக்கரைப்பற்று அன்பு வீதியில் வைத்து, நிப்றாஸ் என அழைக்கப்படும் ஏ.எஸ். அப்துல் நாஸர் என்பவரை 02 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அந்தப் பிரதேசத்தில் ஹெரோயின் மொத்த வியாபாரத்தில் ஈடுபடும் முக்கிய நபர் குறித்த தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்தன. அந்த நபரின் பெயர் சாஜித்.

உப பொலிஸ் பரிசோதகர் அஸீம் குழுவினர் அந்த நபருக்காகக் காத்திருந்தனர். அன்றைய தினம் மாலை 6.55 மணியளவில் அக்கரைப்பற்றில் ஸ்கூட்டி ரக மோட்டார் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த ஏ.பி. அஹமட் சாஜித் என்பவரை பொலிஸார் அதிரடியாக வளைத்துப் பிடித்தனர். அதன்போது சாஜித் செலுத்தி வந்த ஸ்கூட்டியினுள் 10 கிராம் ஹெரோயின் சிக்கியது; சாஜித் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் பொலிஸார் விட்டு விடவில்லை. தமது விசாரணைகளை சாஜித் என்பவரிடம் தீவிரமாக முன்னெடுத்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர் உண்மைகளை சொல்லத் தொடங்கினார்.

சகோதரனின் வளவுக்குள் மறைத்து வைத்து வியாபாரம்

சாஜித் என்பவரின் மூத்த சகோதரர் ஒருவர் துறைமுக அதிகார சபையில் பணியாற்றுகிறார். அவருக்கு அக்கரைப்பற்றில் ஒரு வளவு உள்ளது. அங்குதான் ஹெரோயின் போதைப் பொருளை மறைந்து வைத்து – வியாபாரம் செய்து வந்துள்ளார் சாஜித்.

அவரை அந்த இடத்துக்கு உப பொலிஸ் பரிசோதகர் அஸீம் தலைமையிலான குழு அழைத்துச் சென்றபோது, அங்கு மறைத்து வைத்திருந்த 110 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை சாஜித் எடுத்துக் கொடுத்தார். குறித்த இடத்தில் டிஜிட்டல் தராசு, கைத்தொலைபேசி, 54 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றினையும் பொலிஸார் கைப்பற்றினார்கள்.

குறித்த தினம் கைப்பற்றிய 122 கிராம் ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி சுமார் 40 லட்சம் ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பல கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளை இவர் விற்றுள்ளதாக அறிய முடிகிறது.

பிரதான வியாபாரியான சாஜித் என்பவரின் கீழ், 10க்கும் மேற்பட்டோர் ஹெரோயின் விநியோகஸ்தர்களாகச் செயற்பட்டுள்ளனர். இவர்கள் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை உள்ளிட்ட பிரதேசங்களில் ஹெரோயின் விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மாணவர்களுக்கும் வியாபாரம்

பாடசாலை மாணவர்களுக்கும் இவர்கள் ஹெரோயின் விற்றுள்ளனர். குறிப்பாக சாதாரணதரம் மற்றும் உயர்தரம் படிக்கும் மாணவர்களுக்கே இவர்கள் போதைப் பொருள் விற்பனை செய்துள்ளனர்.

01 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை 15 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் ரூபா வரையில் – இப்பகுதியில் பிரதான வியாபாரி விற்பனை செய்துள்ளார்.

இதனைப் பெற்றுக் கொள்ளும் விநியோகஸ்தர்கள் 01 கிராம் ஹெரோயினுடன், பனடோல் மாத்திரையை தூளாக்கி கலந்து அதனை 30 பொதிகளாக்குகின்றனர். பின்னர் ஒரு பொதி ஆயிரம் ரூபாய் எனும் கணக்கில், 30 ஆயிரம் ரூபாவுக்கு அவற்றினை விற்கின்றனர்.

திருடத் தொடங்கும் போதைப் பேர்வழிகள்

ஹெரோயின் பாவிப்போர் – அதனைப் பெற்றுக்கொள்ளப் பணம் கிடைக்காதபோது, திருடத் தொடங்குகின்றனர் என்றும், அவ்வாறு திருட்டில் ஈடுபட்ட ஹெரோயின் பாவனையாளர்கள் 10க்கும் மேற்பட்டோரை தாம் கைது செய்துள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் கூறினர்.

ஹெரோயின் விற்பனையுடன் தொடர்புடைய சுமார் 20 பேரை அக்கரைப்பற்று பொலிஸார் அண்மைக்காலத்தில் கைது செய்துள்ளனர். இவர்கள் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

போதைப் பொருள் விற்பவர்களை இல்லாமலாக்கும் வரையில், போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துதல் சிரமமான காரியமாகும்.

எனவே, ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்டோர் தொடர்பில் தமக்கு தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் அக்கரைப்பற்று பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

போதையற்ற சமூகமொன்ற உருவாக்குவதற்காக நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டியமை அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்