அதாஉல்லாவுக்கு முன்னர், ஆடை விவகாரம்: வாங்க கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்

🕔 September 23, 2020

நாடாளுமன்ற சம்பிதாயங்களுக்கு முரணாக நேற்றைய தினம் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – ஆடை அணிந்து வந்தமையினால், நேற்றைய தினம் சபையில் ஏற்பட்ட களேபரம் குறித்து நாம் அறிவோம்.

இந்த நிலையில் நாடாளுமன்றில் சம்பிரதாயங்களை மீறி கடந்த காலங்களில் ஆடை அணிந்து வந்த உறுப்பினர்கள் தொடர்பாக, சில தகவல்களைத் தொகுத்து டொக்டர் எஸ். கியாஸ்டீன் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார்.

அவற்றினை வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

தனது சட்டைப் பொத்தானை முழுமையாக பூட்டாமல் வந்த டட்லி சேனநாயக்கா நாடாளுமன்றில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சில செய்திகள் உள்ளன.

2009 ஜூன் 11 இல் நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த பெண் உறுப்பினர் தங்கேஸ்வரி கதிராமன் – சல்வார் கமிஸ் அணிந்து வந்ததால் சபையை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாரி அணிதல் வேண்டும் என்பதுடன் கை இல்லாத (Sleeveless blouse ) பிளவுஸ் அணிதல் கூடாது என்பது நாடாளுமன்ற விதி.

தனது இடுப்புப் பகுதியில் மிகப்பெரிய சத்திர சிகிச்சை தழும்பு இருப்பதனை மறைப்பதற்காகவே, தான் அவ்வாறு ஆடை அணிந்து வந்ததாகவும் அந்த ஆடையை தனக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் தங்கேஸ்வரி வினயமாக வேண்டிக் கொண்டபோதும் அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.

இருந்தபோதும் ஜே.வி.பி.யின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மா, அபாயா மற்றும் ஹிஜாப் அணிந்துவர அனுமதிக்கப்பட்டார். இதற்கான அனுமதியை அவர் முன்கூட்டியே பெற்றிருந்தார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒருபோதும் தேசிய உடை அணிவதில்லை.

எனவே நாடாளுமன்ற சம்பிரதாய உரையாற்ற வரும்போது எவ்வாறு உடை அணிவது என்றும், தான் வழமையாக அணியும் அரைக்கை சேர்ட் மற்றும் நீளக் காற்சட்டை (short sleeve shirt and trouser) அணிந்து நாடாளுமன்றம் வருவதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளலாமா எனவும் சட்ட ஆலோசனை பெறப்பட்ட பின்னணியில், இறுதியில் ‘கோட் சூட்’ அணிந்த நிலையில் அவர் நாடாளுமன்றம் வந்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்