முஸ்லிம்களின் ‘இதயம்’ என்னவாகும்: பொதுத் தேர்தல் கணிப்பு

🕔 May 26, 2020

– முகம்மது தம்பி மரைக்கார் –

நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் இரண்டு. அவை – அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களாகும். கடந்த நாடாளுமன்றில் இறுதியாக அங்கம் வகித்த 20 உறுப்பினர்களில் 08 பேர் இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்தவர்களாவர். அதிலும் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தை 05 உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களில் இருவர் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.  

இலங்கை முஸ்லிம்களின் இதயமாக அம்பாறை மாவட்டம் கருதப்படுகிறது. அதனால்தான், முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் அம்பாறை மாவட்டத்தை குறிவைத்து இயங்கி வருகின்றன. குறிப்பாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அத்திவாரமாக அம்பாறை மாவட்டமே உள்ளது.

முஸ்லிம் காங்கிரஸுக்கு கடந்த நாடாளுமன்றத்தில் அம்பாறை மாவட்டம் சார்பாகத் தெரிவு செய்யப்பட்ட 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றினையும் அம்பாறை மாவட்.டத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியிருந்தது. ஆக, மொத்தம் முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

கடந்த நாடாளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு மொத்தமாக 07 பிரதிநிதிகள் இருந்தனர். இவர்களில் 06 பேர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டும், தேசியப்பட்டில் ஊடாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்தனர். ஒருவர் மட்டும்தான் முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகி இருந்தார்.

கடந்த தேர்தல்

அம்பாறை மாவட்டம் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாகும். கடந்த முறை, இந்த மாவட்டத்திலிலிருந்து முஸ்லிம்கள் மூவரும், சிங்களவர்கள் மூவரும் தமிழர் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். குறித்த 03 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்களாவர். அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைத்து யானைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

07 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 10 வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டும். கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைத்து யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் – தனது சார்பில் 03 முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே களமிறக்கியது. யானைச் சின்னத்தில் போட்டியிட்ட ஏனைய 07 பேரும் சிங்கள மற்றும் தமிழ் வேட்பாளர்களாவர்.

கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் – யானைச் சின்னத்துக்கு வாக்களித்ததோடு, தமது மூன்று விருப்பு வாக்குகளையும் தமது கட்சி சார்பில் போட்டியிட்ட மூன்று முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் வழங்கினர். இதன் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றதோடு, யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் 03 முஸ்லிம் வேட்பாளர்களும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகினர். இதேவேளை யானைச் சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு வேட்பாளர் மட்டுமே அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். 

பொத்துவில் தொகுதிக்கான அநீதி

ஆனால், இம்முறை பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்து அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதேவேளை, வழமையாக கூட்டணியமைக்கும் போது, 03 வேட்பாளர்களை மட்டுமே களமிறக்கும் முஸ்லிம் காங்கிரஸ் 06 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. இதனால், முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளும் விருப்பு வாக்குகள் வீழ்ச்சியடைவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

மறுபுறமாக, தொகுதி ரீதியாக வேட்பாளர் பங்கீடு செய்துள்ளமையிலும் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் அநீதி செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

அம்பாறை மாவட்டம் (திகாமடுல்லா தேர்தல் மாவட்டம்) 04 தொகுதிகளைக் கொண்டது. அவை பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை மற்றும் அம்பாறை தொகுதிகளாகும். இவற்றில் அம்பாறை சிங்கள வாக்காளர்களையும் ஏனைய மூன்று தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளாகும்.

மேற்படி தொகுதிகளில் பொத்துவில் மற்றும் அம்பாறை ஆகியவை இரட்டை உறுப்புரிமையினைக் கொண்ட தொகுதிகளாகும். அந்த வகையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள 04 தொகுதிகளிலும் 06 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவர். அதிக வாக்குகளைப் பெறும் கட்சிக்கு ‘போனஸ்’ ஆக – ஒரு உரிப்புரிமை வழங்கப்படும்.

இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்து தொலைபேசி சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ், தனது 06 வேட்பாளர்களில் கல்முனைத் தொகுதியிலிருந்து ஒருவரையும், சம்மாந்துறைத் தொகுதியிலிருந்து ஒருவரையும் தெரிவு செய்துள்ள அதேவேளை, இரட்டை அங்கத்துவமுள்ள பொத்துவில் தொகுதிக்கு 04 வேட்பாளர்களை நியமித்துள்ளது. அதனால்தான் மு.காங்கிரஸின் இந்த வேட்பாளர் பங்கீட்டு முறைமை அநீதி எனக் கூறப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில் 74068 வாக்காளர்கள் உள்ளனர். சம்மாந்துறைத் தொகுதியில் 85911 வாக்கள் உள்ளனர். பொத்துவில் தொகுதியில் 159694 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

கல்முனைத் தொகுதியில் மு.காங்கிரஸ் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் களமிறக்கப்பட்டுள்ளார். சம்மாந்துறைத் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் – மு.கா. சார்பில் போட்டியிடுகிறார். பொத்துவில் தொகுதியில் மு.காங்கிரஸ் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் போட்டியிடும் அதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம் மற்றும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம். வாஸித் ஆகியோரும் மு.கா. சார்பில் போட்டியிடுகின்றனர்.

‘வெட்டுக்குத்து’ அரசியல்

இந்த நிலைவரம் காரணமாக மேற்படி முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களிடையே விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான ‘வெட்டுக் குத்து’ அரசியல், தேர்தல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையிலேயே ஆரம்பித்துள்ளமையை வெளிப்படையாகவே காணக் கூடியதாக உள்ளது.

உதாரணமாக, பொத்துவில் தொகுதியில் மு.கா. சார்பாக போட்டியிடும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைஸல் காசிமை, அதே தொகுதியில் மு.காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர், வெளிப்படையாகவே எதிர்த்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதேவேளை, பொத்துவில் தொகுதியில் போட்டியிடும் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம் – பைசல் காசிமுக்கு ஆதரவாளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அரசாங்கத்தில் சுகாதார ராஜாங்க அமைச்சராக பைசல் காசிம் இருந்தபோது, அவரின் இணைப்பாளராக தவம் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களிடையே இவ்வாறு ‘வெட்டுக்குத்து’ அரசியல் ஆரம்பித்துள்ள அதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியமைத்துப் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி, அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று – வெற்றி பெறுமா என்கிற ஐயங்களும் எழுந்துள்ளன. கடந்த தேர்தல்களில் ஒன்றாக இணைந்து போட்டியிட்டு வந்த ரணில் மற்றும் சஜித் தரப்பினர், இந்தத் தேர்தலில் இரண்டாகப் பிளவுபட்டு போட்டியிடுவதால், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியமைத்துள்ள சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கணக்கு

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ 259673 வாக்குளையும் (சுமார் 63 வீதம்), கோட்டாபய ராஜபக்ஷ 135058 வாக்குகளையும் (கிட்டத்தட்ட 32 வீதம்) பெற்றிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 05 லட்சத்து 3790 ஆக இருந்தனர்.

ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமாஸவுக்குக் கிடைத்த வாக்குகளில் தமிழர்களின் அதிகப்படியான வாக்குகள் இம்முறை தமிழ் கட்சிகளுக்கே போய்ச் சேரும். அவ்வாறான வாக்குகளின் எண்ணிக்கையை சுமார் 50 ஆயிரமாக கணிப்பிடலாம். அதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்குக் கிடைத்த – ரணில் அணி சார்பானவர்களின் வாக்குகள் இம்முறை அநேகமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைக்கும்.

மறுபுறமாக, அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ், றிசாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களும் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனால், முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்கும் வாக்குகளிலும் சரிவு ஏற்படுவதற்கான சாத்தியங்களும் உள்ளன.

இவற்றினையெல்லாம் மொத்தமாகக் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி – அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுமா என்கிற கேள்விகள் உள்ளன. 

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினால் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றிபெற முடியாமல் போனால், முஸ்லிம் காங்கிரஸால் அதிகபட்சமாக 02 நாடாளுமன்ற உறுப்பினர்களைத்தான் அந்த மாவட்டத்தில் வெற்றிகொள்ள முடியும் என்கிற கணிப்பீடுகளும் உள்ளன.

அம்பாறையில் இணையாத ‘கை’கள்

இதேவேளை, அநேகமான மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்ணியமைத்தும், புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுடனும் கூட்டணியமைத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் றிசாட் பதியுதீன் தலைமயிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்; அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுகிறது.

இதன் காரணமாகவும், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக் கொள்ளும் வாக்குகளில் சரிவு ஏற்படும். கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 33102 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் பகை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கடந்த முன்னைய அரசாங்கத்தில் ஏற்பட்ட 52 நாள் அரசியல் குழப்பம் காரணமாக, கைகோர்த்துக் கொண்டு நட்புறவுடன் செயற்படத் தொடங்கின. இதனால், புத்தளம் மாவட்டத்தில் மேற்படி இரண்டு முஸ்லிம் கட்சிகளும் கூட்டணியமைத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் தராசு சின்னத்தில் போட்டியிடுகின்றன.

மேற்படி தராசு – ‘முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு’ எனும் கட்சியின் சின்னமாகும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மச்சானும் (மாமி மகன்) அவரின் பிரத்தியேகச் செயலாளருமான எம். நயீமுல்லா என்பவர் இந்தக் கட்சியின் செயலாளராகப் பதவி வகிக்கின்றார்.

எவ்வாறாயினும் புத்தளம் மாவட்டத்தில் கூட்டணியமைத்துப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸும் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், இலங்கை முஸ்லிம்களின் இதயமாகக் கருதப்படும் அம்பாறை மாவட்டத்தில் பிரிந்து நின்று எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமையானது, என்ன வகையான அரசியல் என்று சமூக அக்கறையுள்ள முஸ்லிம் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டணியமைத்துப் போட்டியிடுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு கட்டத்தில் தயாராக இருந்ததாகவும், ஆனால் மக்கள் காங்கிரஸ் எதிர்பார்த்த வேட்பாளர் எண்ணிக்கையினை வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் சம்மதிக்காமையினால்தான், மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை எடுத்ததாகவும் அறிய முடிகிறது.

நன்றி: தமிழ் மிரர் (26 மே 2020)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்