உலகின் சிறந்த சவப்பெட்டி நடனக்குழு

🕔 May 18, 2020

வப்பெட்டிகளை வைத்துக் கொண்டு நடமாடும் ஒரு குழுவினரை அண்மைக்காலமாக இணையத்தில் கண்டிருப்பீர்கள்.

பல்வேறு வீடியோ ‘மீம்’களில் இவர்களைக் காணும்போது நம்மை அறியாமலேயே சிரித்திருக்கிறோம்.

இந்த சவப்பெட்டி நடனக்காரர்கள் கானா நாட்டைச் சேர்ந்தவர்கள். 2017 ஆம் ஆண்டு சமூக ஊடகங்களில் ‘வைரல்’ ஆன இவர்கள், தற்போதைய காலகட்டத்தில் பலரின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் மீண்டும் ‘வைரல்’ ஆகி இருக்கிறார்கள்.

உலகம் முழுக்க லட்சக்கணக்கான ‘மீம்’களை அலங்கரித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு தற்போது ரசிகர் பட்டாளம் எக்கச்சக்கம் ஆகிவிட்டது.

இதனால் விழிப்புணர்வுக்கு கூட இவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆபிரிக்க நாடான கானாவில் இறுதி ஊர்வலம் என்பது முக்கியமான ஒரு சமூக நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இறுதி ஊர்வலத்தின்போது சவப் பெட்டியை தூக்கி வருவதற்காக சிலர் வேலைக்கு அமர்த்தப் படுவார்கள். சோகமான சூழல், ஒருவித இறுக்கத்துடன் நடைபெறும் இந்த இறுதி ஊர்வலங்களில் சவப்பெட்டி தூக்குவதற்கென கானா முழுவதுமே பல குழுவினர் உள்ளனர்.

இந்த நடனக் குழுவின் நிறுவுனரான பெஞ்சமின் நாயுடுவும் ஆரம்பத்தில் சவப்பெட் தூக்குபவராகத்ததான் வாழ்க்கையை தொடங்கினார்.

ஆனால் பல ஆண்டு அனுபவத்துக்குப் பிறகு தனது தொழிலில் ஏதாவது புதுமையை புகுத்த வேண்டும் என நினைத்த அவர், தன்னுடைய மற்றொரு பொழுதுபோக்கான நடனத்தை அதில் புகுத்தினார். இதற்கு உள்ளூர் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்க, அதற்கென ஒரு குழுவை அமைத்தார்.

இந்த நடனம் முழுக்க – முழுக்க இறுதி ஊர்வலம் நடத்தும் குடும்பத்தினரின் ஒப்புதலோடுதான் நடக்கும். அவர்கள் நடனம் தேவையில்லை எனக் கூறினால் வழக்கமான முறையில் அமைதியான இறுதி ஊர்வலம் நடக்கும். ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை பெஞ்சமின் குழுவினரின் நடனத்துக்கு தற்போது வரை யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

சொர்க்கத்திற்கு செல்லும் பயணத்தில் தன்னுடைய அன்பானவர்களை மகிழ்ச்சியுடன் நடனம் ஆடிக்கொண்டே வழி அனுப்பி வைப்பதாக உள்ளூர்வாசிகள் இந்த நடன நிகழ்வுக்கு விளக்கம் அளிக்கின்றனர்.

உள்ளூர் பிரபலமாக வலம் வந்தாலும் 2015 ஆம் ஆண்டு யுடியூபில் வெளியான ஒரு வீடியோதான் பெஞ்சமின் குழுவினரை வெளி உலகில் பிரபலம் ஆக்கியது. அந்த வீடியோ சுமார் 04 மில்லியன் பார்வைகளை பெற்றுது.

அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு இந்த குழுவினர் தொடர்பாக பிபிசியின் ஆபிரிக்க சேவை வெளியிட்ட காணொளி அவர்களை ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் பிரபலமாக்கியது.

இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் இந்தக் குழுவினரின் நடனத்தை உதாரணமாகக் கொண்டு சிலர் டிக்டொக்கில் வீடியோ உருவாக்கி பகிர, தற்போது இணைய உலகத்தில் வைரலாகி இருக்கிறார்கள் இந்த நடனக்காரர்கள்.

பெஞ்சமின் 300 பேருக்கு வேலையளித்துள்ளார். இதில் பெண்களும் அடங்குவார்கள். தன்னுடைய குழுவை ‘உலகின் சிறந்த சவப்பெட்டி நடன குழு’ என பெஞ்சமின் அழைத்துக் கொள்கிறார்.

இந்நிலையில் இந்தக் கொரோனா காலத்தில் பெஞ்சமின் நிலை குறித்து அறிய, அவரை பிபிசி ஆபிரிக்க சேவை சந்தித்தது.

“நாங்கள் தற்போது வைரல் ஆகி விட்டோம். பிரச்சினைகள் முடிந்ததும் வெளிநாடுகளுக்கு சென்று டொலர்களில் எங்கள் சேவை கட்டணங்கள் வசூலிக்கப்படும்” என மகிழ்ச்சி பொங்க பேசியிருக்கிறார் பெஞ்சமின்.

தற்போது தன்னுடைய அந்தஸ்து உயர்ந்துள்ளதாகவும் பல நிறுவனங்கள் நேர்காணலுக்கு அழைப்பதாகவும் பெஞ்சமின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். “தற்போது கொரோனா காரணமாக எங்களுடைய தொழில் வாய்ப்பு குறைந்து விட்டாலும் விரைவில் இதிலிருந்து மீண்டு வருவோம்; எங்களை ஒரு ‘பிராண்ட்’ ஆக்கி சம்பாதிக்கப் போகிறோம். எங்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களை கண்காணிப்பதற்காக கென்யாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை நியமித்து உள்ளோம்” என பெஞ்சமின் நம்பிக்கையோடு பேசுகிறார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்