முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை: தடுத்து நிறுத்த, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

🕔 April 29, 2020

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீனை கைது செய்வதற்கான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால், அதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் அவர் – உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளதாகவும் அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, வன்னி மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தமைக்காக, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வேண்டுமென்றே குற்றங்களைச் சுமத்தி, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதனால், அதற்கு எதிராகவும் அதனைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார் என, அவரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் கீழ் இயங்கி வந்த, நீண்டகால இடம்பெயர்ந்தவர்களுக்கான மீள்குடியேற்ற அமைச்சின் திட்ட முகாமைத்துவ பிரிவின் ஊடாக, குறித்த போக்குவரத்துக்கான அனுமதி அரசிடம் முறைப்படி பெறப்பட்டிருந்தது. அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில், நிதியமைச்சின் ஒப்புதலுடனும், தேர்தல் ஆணையாளரின் அங்கீகாரத்துடனும், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகளுக்கு கட்டணம் செலுத்தப்பட்டு, இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு இந்தப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன என்றும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பிலேயே முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு, அவரைக் கைது செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். எனவே அவ்வாறு கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும் வகையிலேயே குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்