கொரோனா: புதிய நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்படவில்லை; மேலும் பல புள்ளி விவரத் தகவல்கள்

🕔 March 25, 2020

– மப்றூக் –

நாட்டில் இன்று புதன்கிழமை கொரோனா தொற்றுக்குள்ளான புதிய நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய நிலைவரப்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொற்றுக்குள்ளான மூவர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதிலிருந்து நேற்றைய தினம் வரையிலான காலப்பகுதியில், 17 மற்றும் 19ஆம் திகதிகளிலேயே அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்.

மேற்படி தினங்களில் தலா 13 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டார்கள்.

ஆயினும் நேற்று செவ்வாய்கிழமை 05 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் அதிகமானோர் 41 தொடகம் 50 வரையிலான வயதுடையோராக உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 33.3 வீதமானோர் இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.

பாலின அடிப்படையில், ஆண்கள்தான் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை தொற்றுக்குள்ளான 102 பேரில் 68 வீதமானோர் ஆண்களாவர். 32 வீதமானோர் பெண்கள்.

மறுபுமாக கொரோனாவினால் அதிகம் பாதிப்புக்குள்ளானவர்கள் கொழும்பு (22), களுத்துறை (14), கம்பஹா (10) மற்றும் புத்தளம் (09) ஆகிய மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்னர்.

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்