நகர மறுக்கும் இந்த நாட்களை அர்த்தமுடையவையாக்க, என்ன செய்யலாம்?

🕔 March 24, 2020

– இம்திஸா ஹஸன் –

தொற்று வியாதியென்னும் பீதியால் மனிதன் தன்னையும் தன் குடும்பத்தையும் காத்துக் கொள்ளத் துடிக்கும் அதே நேரம், இச்சூழ்நிலையை அலட்சியமாகக் கருதும் சிலரும் எம்மிடையே இல்லாமலில்லை.

எது எப்படி இருந்தாலும், வீட்டிலிருந்து எம்மையும் எம் சுகாதாரத்தையும் பாதுகாத்து இவ் வைரஸுக்கு விடைகொடுக்க வேண்டுமென்பதே இன்றைய உண்மையான தேவையும் தீர்வுமாகும். இதனடிப்படையில் எம்மையும், பிள்ளைகளையும், குடும்பத்தையும் இச்சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு கையாள்வதென்பதில் எம்மிடையே பல சீரற்ற மனோநிலை காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

என்னைப் பெறுத்தவரை இதற்கு முன்னர் அனுபவித்திராத இச்சூழலை, சில தந்திரோபாயங்களின் அடிப்படையில் எடுத்தாளும் பொருட்டு, எமது மனநிலைகளில் சில தீர்மானங்களைப் பெற்றவர்களாக மாற வேண்டும்.

பள்ளிவாசலகள் மூடப்பட்டுள்ள நிலையில் நாமும் பிள்ளைகளும் வீடுகளிலேயே சேர்ந்து தொழும் ஒரு சூழலை உருவாக்கலாம். இது பிள்ளகைளின் மனநிலையில் மாத்திரமல்லாமல், அவர்களது ஆளுமைகளில் கூட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும், தொழும் நிலைகளில் பிள்ளைகளுக்கிருக்கும் திருத்தங்களை இதன்போது சொல்லிக் கொடுக்கலாம். சிறிய சூறாக்களை பிள்ளைகள் மனனம் செய்யலாம். இந்த நிலையைானது தொழுவதில் பிள்ளைகளுக்கு ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.

ஐவேளையும் கூட்டுத் தொழுகையில் ஈடுபடுதல், நேரத்திற்கியங்குதல், ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு போன்ற அனைத்து விழுமியங்களையும் இக் காலகட்டத்தில் நாம் மறுசீரமைத்துக் கொள்ள முடியும்.

உணவுப் பழக்கவழக்கத்தை கூட மறுசீரமைப்பதற்கான ஓர் அவகாசமாக இந்த நாட்களை நாம் எடுத்துக்கொள்ளலாம். சத்துள்ள உணவுகள், காய்கறி வகைகளென – பிள்ளைகள் விரும்பியுண்ணாதவற்றினை அருகிலிருந்தே ஊட்டி, அவர்களுக்கு அவற்றினைப் பழக்கலாம்.

நாம் செயற்படுத்தாத வரைதான் எல்லா விடயங்களும் முடியாதவையாக இருக்கும். செயற்பட அடியெடுத்தால் எம்மை அறியாமலே இறையுதவியினால் செய்து முடிக்கலாம். இதற்கு பயிற்சியென்பது அவசியமாகும்.

உளம் என்பதன் திருப்தியான நிலைதான் எமது சிறந்த செயற்பாடுகளின் வெளிப்பாடாகும். அந்த வகையில் இயற்கையை, அசாதாரண சூழலை கடிந்து கொள்ளாமல் இதனை மனதாற ஏற்ற நிலையில், நாட்களை நலவுள்ளதாவும் நேரங்களை நேர்த்தியானவையாகவும் மாற்றி, வீடுகளுக்குள் அடங்கியிருந்தாலும் கூட, நகர மறுக்கும் இந்த நாட்களை அர்த்தமுடையவையாக மாற்றுவோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்