அரிதான சூரிய கிரகணம்: நாட்டு மக்களுக்கு காணும் சந்தர்ப்பம்

🕔 December 26, 2019
அம்பாறை – சென்றல் கேம்ப் பகுதியில் தென்பட்ட கிரகணம். (படம்: முகம்மட் சாகிர் பேஸ்புக் பக்கத்திலிருந்து)

மிகவும் அரிதான சூரிய கிரகணமொன்று இன்று, டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்டுள்ளது. இதே போன்றதொரு சூரிய கிரகணம் மீண்டும் 2031ம் ஆண்டு மே 16ம் திகதியன்றே நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், சௌதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த சூரிய கிரகணத்தை காண முடிந்துள்ள போதும், சூரிய கிரகணம் தெரியும் அளவு மற்றும் தெளிவு ஊருக்கு ஊர் மாறுபட்டதாகும்.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணமாகும். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.

இன்றைய சூரிய கிரகணம் ‘வளைவு சூரிய கிரகணம்’ (annular solar eclipse) என்றும் சொல்லப்படுகிறது.

அதாவது சூரியனை முழுமையாக சந்திரன் மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும்.

இதன்போது சாதாரண கண்களில் சூரியனை காண்பது கடினம். எனவே, இந்த வளையத்தை நேரடியாக பார்க்கக் கூடாது.

அது கண்களின் விழித்திரையை பாதிக்கும். மேலும் சூரியனை சந்திரன் கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளிக்கும். அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியுடன் சிவப்பு நிறத்தை ஓரளவு காண முடியும்.

இன்று, வியாழக்கிழமை (டிசம்பர் 26) தென்படக்கூடிய கிரகணம் காலை 08:08 மணி அளவில் துவங்கி, 11:19 மணிக்கு முடிந்துவிடும். சரியாக 09:35 மணி அளவில் சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கும். இந்த முழு கிரகண வடிவம் சுமார் 03 நிமிடங்களுக்கு நிலைபெற்றிருக்கும்.

Comments