அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில், அதிக விலையில் பொருட்கள் விற்பனை: பொதுமக்கள் புகார்

🕔 December 22, 2019

– அஹமட் –

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில் (Canteen) சில பொருட்கள் கண்மூடித்தனமாக – அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக, நேற்று சனிக்கிழமை குறித்த சிற்றுண்டிசாலையில் நோயாளி ஒருவருக்கு நீர் அருந்தப் பயன்படுத்தும் பொருட்டு கொள்வனவு செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப் (Plastic cup) ஒன்றுக்கு, 100 ரூபாய் அறவிடப்பட்டதாகவும், அதற்கு பற்றுச் சீட்டுக் கேட்ட போது, 20 ரூபாய் மிகுதியாகக் கொடுக்கப்பட்டதாகவும், இர்பான் முகைடீன் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளியிலுள்ள கடைகளில் அந்த பிளாஸ்டிப் ‘கப்’ 40 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையிலேயே விற்பனை செய்யப்படுவதாகவும், குறித்த பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’02ம் விடுதியில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு தாயின் தேவைக்காக இங்கு காட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கப் (Plastic cup) நேற்று 2019.12.21 மாலை வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்யப்பட்டது. இதற்கு ரூபா 100/- நோயாளியின் மகனால் கொடுக்கப்பட்டது.

இதனை வாங்கிக் கொண்டு வந்தவர் வெளியில் நின்ற வைத்தியசாலை ஊழியர்கள் மூவரிடம் இந்த விடயத்தை பேசி கொண்டிருந்த போது, என்னை கண்டு விடயத்தை கூறினார். பின்னர் நானும் உரியவரும் சிற்றுண்டிச்சாலைக்கு சென்று, உரிய ‘கப்’பை காட்டி இதற்கு பற்றுச்சீட்டு கேட்டோம். அதற்கு; “நாங்கள் இங்கு பற்றுச்சீட்டு கொடுப்பதில்லை” என்று கூறிவிட்டு, 20/- ரூபா பணம் திருப்பிதந்தார். அப்போது அதன் பெறுமதி 80/- ரூபாவாகும்.

ஆனால் இதன் சந்தை பெறுமதி 40 – 50 ரூபா மட்டுமே.

வைத்தியசாலை விடுதியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள், அங்கு இலவச உணவை பெறும் நிலையில், அவர்களின் பொருளாதார நிலையறியாமல் இவ்வாறு கண்மூடித்தனமாக வியாபாரம் செய்பவர்களுக்கு அரச நிறுவனத்தில் வியாபாரம் செய்ய இடம் கொடுத்து, இவ்வாறான அநியாயத்துக்காக நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் இருப்பதன் மர்மம் என்ன?’ என்று அந்த பேஸ்புக் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் விவகாரம் தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிருவாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்