ஏப்ரல் தாக்குதலைத் தவிர்த்திருக்க முடியும்: வேறேதும் சொல்ல விரும்பவில்லை: ஜனாதிபதி மைத்திரியின் இறுதி உரையில் தெரிவிப்பு

🕔 November 17, 2019

லங்கைக்குப் பொருத்தமற்ற முதலாளித்துவ கொள்கைக்கும், தான் பெரிதும் மதிக்கும் ஜனநாயக சமூகம் மற்றும் சுதேச சிந்தனைக்கும் இடையிலான வேறுபாடே, அரசாங்கத்தில் நிலவிய குழப்பம் உச்ச நிலையை அடைவதற்கு பின்னணியாக அமைந்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையிலிருந்து தனது பதவிக் காலத்தின் இறுதி உரையை, நாட்டு மக்களுக்கு நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றினார்.

இந்த உரை – தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

கடந்த 05 வருட காலத்தில் அரசாங்கத்தினால் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் மக்களுக்கும் நாட்டுக்கும் ஆற்ற வேண்டிய மிக முக்கியமான சில பணிகளை செய்ய இயலாது போனதாக இதன்போது தெரிவித்த ஜனாதிபதி; “அதற்கு அரசாங்கத்தில் நிலவிய சிக்கல் நிலையே காரணமாகும்” என்றும் கூறினார். 

”நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் எல்லையற்ற அதிகாரங்கள் குறைக்கப்பட்டமையினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் தவறான முறையில் பயன்படுத்தியவர்களும் இருக்கவே செய்கின்றனர்” எனவும் அவர் இதன்போது குற்றம்சாட்டினார். 

மத்திய வங்கி சம்பவம், மிகப் பெரும் ஊழல்

இதேவேளை மத்திய வங்கி பிணைமுறி சம்பவமே, நாட்டில் இடம்பெற்ற  மிகப் பெரிய ஊழல் என இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

”அந்த ஊழல் பற்றி விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கைகள் இன்றும் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன. அது மட்டுமன்றி, இதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தடயவியல் கணக்காய்வொன்றினை மத்திய வங்கியில் மேற்கொள்ள வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டது”.

“அதனை எமது தேசிய கணக்காய்வு நிறுவனங்களால் மேற்கொள்ள முடியாது என்பதனால், இரண்டு வருடங்களுக்கு முன்னர் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டு தடயவியல் கணக்காய்வினை மேற்கொண்டு தற்போது 05 கணக்காய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. நீங்கள் வியப்படையும் பல விடயங்கள் அதில் காணப்படுகின்றன. அதிகாரத்திற்கு வரும் புதிய அரசாங்கம் அந்த தடயவியல் கணக்காய்வு அறிக்கைகளை நாடாளுமன்றுக்கு சமர்ப்பித்து மக்களுக்கு உண்மையை அறியத்தருவார்கள் என நான் நம்புகின்றேன்” என்றும் அவர் இதன்போது கூறினார்.

அதிகாரங்களை விட்டுக் கொடுத்தேன்

“மீண்டுமொருமுறை ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என நான் கூறியிருந்தேன். அதற்கிணங்க, 19வது திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி என்ற வகையில் எனக்கிருந்த அளவற்ற அதிகாரங்களை நாடாளுமன்றம், அமைச்சரவை, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நீதிமன்றத்திற்கு நான் கையளித்தேன்”.

”அத்தோடு நின்றுவிடாது மக்கள் என்னை 06 வருடங்களுக்காக தேர்ந்தெடுத்த போதிலும் அதையும் நான் 05 வருடமாக குறைத்துக்கொண்டேன். பெரும்பாலும் எமது நாட்டில் அதிகாரத்திற்கு வந்த அனைத்து அரச தலைவர்களும் சிலர் பழக்கமாகவும் சிலர் சம்பிரதாயமாகவும் தமது அதிகாரங்களை அதிகரித்துக்கொள்ளவே அரசியலமைப்பினை பயன்படுத்தினர். எனினும் நான் அளவற்ற நிறைவேற்று அதிகாரங்களை குறைத்தது மாத்திரமன்றி, ஜனாதிபதியின் பதவிக்காலத்தையும் 05 வருடமாக குறைக்க முடிந்ததையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்” எனவும் தனது உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தனது பதவிக்காலத்தில் நாட்டில் பூரண ஜனநாயகத்தை உறுதிசெய்ய தன்னால் முடிந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

“முன்னொருபோதும் இல்லாதவகையில் பொதுமக்களின் சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை மிக உயர்ந்த மட்டத்தில் நான் உறுதி செய்துள்ளேன் என நான் நம்புகின்றேன். அதன் பெறுபேறாகவே என்னால் பெற்றுக்கொடுக்கப்பட்ட அளவற்ற ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பயன்படுத்தி என்மீதே அவதூறுகளையும் போலிப் பிரசாரங்களையும் சமூக ஊடகங்களின் வாயிலாக சிலர் முன்னெடுத்தனர். ஆயினும் அவற்றைக் கண்டு நான் ஒருபோதும் சளைக்கவில்லை. அதுவே எனது கொள்கையாகும்”.

பழிவாங்கல்களில் ஈடுபடவில்லை

“அரச தலையீட்டுடன் எந்தவித கொலைகளோ, அரசியல் பழிவாங்கல்களோ, துன்புறுத்தல்களோ, சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதோ எதுவுமே எனது பதவிக்காலத்தில் இடம்பெறவில்லை. வேறு முறையில் கூறுவதாயின் அரசியல் பழிவாங்கல்களுக்காகவோ வேறு பகை காரணமாகவோ எவர் மீதும் அரச துப்பாக்கிகளின் தோட்டாக்கள் பாயவில்லை. எனது தேர்தல் பிரகடனத்தில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பலவற்றை என்னால் நிறைவேற்ற முடிந்ததைப் போன்று, நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சிறந்த சேவையை ஆற்றினேன் என்பதே எனது நம்பிக்கையாகும்”.

“நான் ஆட்சிக்கு வந்தபோது எமது நாட்டிற்கு காணப்பட்ட வெளிநாட்டு அழுத்தங்களை நீங்கள் அறிவீர்கள். 2014ஆம் ஆண்டளவில் சர்வதேச மட்டத்தில் எமது நாடு இருந்த நிலைமையையும் தற்போது உள்ள நிலைமையையும் நீங்களே ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகவே இதனை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்”.

“அன்று காணப்பட்ட அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் காரணமாக நிலவிய சர்வதேச அழுத்தங்களை சுமார் 90 சதவீதமளவில் நான் நீக்கியுள்ளேன். சர்வதேச நீதிமன்றத்தை இலங்கைக்கு கொண்டு வர வேண்டுமென்பது பற்றியும் பேசினார்கள். அதேபோன்று நாட்டின் ஐக்கியம் தொடர்பிலும் சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. ஆயினும் அவை அனைத்திலிருந்தும் தற்போது நாம் மீண்டுள்ளோம்”.

தற்போதைய சவால்கள்

“தற்போதும் எமக்கு சில சவால்கள் காணப்படுகின்றன. அவை – வறுமையிலிருந்து மீட்சிபெறல், சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, பர்கர் ஆகிய அனைத்து இனங்களுக்கிடையேயும் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புதல், மக்களிடையே சகோதரத்துவத்தையும் நம்பிக்கையையும் உறுதிப்படுத்துதல், அனைத்து மக்களும் ஒரே குடும்பமாக வாழ்வதற்கான பின்னணியை ஏற்படுத்துதல் போன்றவையாகும். நான் அதற்காக பெரிதும் முயற்சி செய்தேன். எனது அந்த முயற்சிக்கு சாதகமான பலன்களே கிடைத்துள்ளன”. 

“இனங்களுக்கிடையே குறிப்பாக மொழி ரீதியில் காணப்படும் அச்சம், சந்தேகம், நம்பிக்கையின்மை ஆகியவற்றை இல்லாது செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்”. 

ஊழல், மோசடிக்கு எதிராக கடினமான அரசியல் தீர்மானங்களை நான் மேற்கொண்டதை நீங்கள் அறிவீர்கள். எனது அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல்களை கண்டறிவதற்காக நீதிமன்ற அதிகாரத்துடன் கூடிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நான் நியமித்தேன். இவ்வாறு தனது அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடியை கண்டறிவதற்கு ஆணைக்குழுவை நியமித்த ஒரேயொரு அரச தலைவர் நானே என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்கு முன் இவ்வாறு இடம்பெற்றதில்லை”.

“நாளைய தினம் புதிய ஜனாதிபதி ஒருவர் நாட்டுக்கு தெரிவு செய்யப்படுவார். நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் ஊழல், மோசடியற்ற அமைச்சரவை ஒன்றினை நியமிப்பதே அவர் எதிர்கொள்ளும் முதலாவது சவாலாகுமென நான் நினைக்கின்றேன்.

 பக்கச்சார்பற்ற  நடுநிலையான ஜனாதிபதி ஒருவரின் கீழ் 1947ஆம் ஆண்டின் பின்னர் இந்த நாட்டில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் இதுவாகும். வேட்புமனு கையளிக்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை ,கட்சி பேதமின்றி நடுநிலைக் கொள்கையுடன் எனது பொறுப்பில் உள்ள முப்படையினர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி நாட்டில் மிகவும் அமைதியான தேர்தலொன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுபோன்ற அமைதியான தேர்தலை நடத்துவதற்கு பக்கச்சார்பின்றி நடுநிலையாக நான் இருந்தமையே காரணமாகும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த பிரதமர்களும் ஜனாதிபதிகளும் தேர்தல்களின்போது ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்கு தலைமை வகித்து தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அதனால் அரச அதிகாரங்கள் பெரும்பாலும் முறையற்ற விதத்தில் உபயோகிக்கப்பட்டன. அந்த வரலாறுகளை நீங்கள் அறிவீர்கள். அவை குறித்து இப்போது நான் பேசப்போவதில்லை.

இன்றைய சூழலில் அன்று 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கும் இன்று 2019 நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்குமிடையிலான வேறுபாடு என்ன? இலங்கை சமூகம் எவ்வளவு தூரம் முன்னோக்கி பயணித்துள்ளதென்பதை நீங்களே உணர்கின்றீர்கள்.

புதியவருக்கான பொறுப்புகள்

புதிய ஜனாதிபதிக்கு பல பொறுப்புக்கள் காணப்படுகின்றன. இலங்கை மக்களின் நலனுக்காகவும் பேண்தகு அபிவிருத்திக்காகவும் அதுபோன்று நான் பலப்படுத்திய ஜனநாயகத்தை மென்மேலும் பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வதற்காகவும் நான் பெற்றுக்கொடுத்த வரையறையற்ற ஊடக சுதந்திரத்தை மேலும் பலப்படுத்தவும் வேண்டிய பொறுப்பு புதிய ஜனாதிபதியையே சார்ந்துள்ளது. 

எனது தலைமைத்துவத்தில் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட வேலைத்திட்டங்களில் போதைப்பொருள் ஒழிப்பு, தேசிய உணவுற்பத்தி, சிறுநீரக நோயினை கட்டுப்படுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நலன்பேணல் நடவடிக்கைகள், கிராமசக்தி, மக்கள் இயக்கம், சிறுவர்களை பாதுகாப்போம் போன்றவை முக்கியமானவையாகும்.

இந்த செயற்திட்டங்களை என்னால் முன்னெடுக்கப்பட்டதை விட புதிய அரசாங்கமும் புதிய ஜனாதிபதியும் மேலும் சிறப்பாக முன்னெடுக்க வேண்டுமென நான் கேட்டுக்கொள்கின்றேன்.

வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்பாக

சுதேச சிந்தனையுடன்கூடிய ஜனநாயக ஆட்சியே நாட்டிற்கு தேவையாகும். குறிப்பாக தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்களில் யுத்தத்தின்போது பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்ற என்னால் முடிந்தது.

அவர்களது காணி விடுவிப்பு, சமூக நலன்பேணல், பௌதீக அபிவிருத்தி போன்ற பல விடயங்களை எம்மால் நிறைவேற்ற முடிந்தது. அவ்விடயம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. அவர்களது தேவைகள் முற்றுமுழுதாக நிறைவேற்றப்பட்டுள்ளதென நான் குறிப்பிடவில்லை. அவ்வாறு யாராலும் நிறைவேற்ற முடியாது.

ஆயினும் வடக்கு, கிழக்கு மக்களின் வேதனைகளை குறைப்பதற்காக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி விசேட செயலணி ஒன்றினை நியமித்து அதனூடாக அவர்களுக்கு சேவையாற்ற முடிந்தது. அவ்விடயத்தில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். 

வாளை பாவித்தேன்

ஜனாதிபதி என்ற வகையில் நான் மேற்கொண்ட சில தீர்மானங்கள் புதுமையானவை. வாளை வெளியில் எடுத்தேனே தவிர அதனை பாவிக்கவில்லை என சிலர் குறிப்பிடுகின்றனர். இல்லை. நான் அதை பாவித்தேன். எனது பிரதமரையே நான் நீக்கினேன். புதிய பிரதமர் ஒருவரை நியமித்தேன். நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக நாட்டு மக்களின் விமர்சனத்திற்குள்ளாகிய 05 வர்த்தமானி அறிக்கைகளை வெளியிட்டேன்.

மக்களை பாதுகாப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலக குற்றவாளிகளை தண்டிப்பதற்கான கடுமையான தீர்மானங்களை மேற்கொண்டேன். 

ஏப்ரல் தாக்குதலைத் தவிர்த்திருக்கலாம்

எனது பதவிக்காலத்தில் முகங்கொடுக்க நேர்ந்த உங்களைப் போன்று நானும் மிகுந்த வேதனைக்குள்ளாகிய சம்பவம் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலாகும். அதில் உயிரிழந்த இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை நான் இந்த தருணத்தில் மிகுந்த துயரத்தோடு நினைவுகூருகின்றேன்.

அந்த சம்பவம் எம்மால் நிச்சயம் தவிர்த்திருக்கக்கூடிய சம்பவமாகுமென்பது தெளிவாகும். இவ்விடயம் தொடர்பில் இதைவிட வேறெதனையும் குறிப்பிட நான் விரும்பவில்லை. 

விசேடமாக தங்களது ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பில் நீங்கள் திருப்தியடைகின்றீர்களா என யாரும் என்னிடம் வினவினால் ஒரு கணமும் தாமதிக்காது, ஆம் எனது பதவிக்காலம் தொடர்பில் நான் மிகுந்த திருப்தியடைகின்றேன். மகிழ்ச்சியடைகின்றேன் என்றே நான் குறிப்பிடுவேன்.

ஏனெனில் நாட்டுக்கும் மக்களுக்கும் சாதகமான பல விடயங்களை நான் பெற்றுக்கொடுத்துள்ளேன். நான் பெற்றுக்கொடுத்த பல விடயங்கள் சட்டைப் பைகளுக்கு தெரிவதில்லை. உடம்பினால் உணர முடிவதில்லை. ஜனநாயகம், சுதந்திரம், ஊழலற்ற அரச நிர்வாகத்திற்கு பழக்கப்படுதல், ஆன்மீக சமூகத்தை கட்டியெழுப்பும் பொறுப்பினையும் கடமையையும் நிறைவேற்றுதல் போன்றவை அவற்றுள் அடங்குகின்றன.

கடந்த 05 வருட காலமாக ஜனாதிபதியாக பதவி வகித்த நான் விடைபெறும் இந்த சந்தர்ப்பத்தில் நாளைய தினம் புதிய ஜனாதிபதி ஒருவரை நீங்கள் உங்கள் வாக்குகளினால் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நாட்டின் எதிர்காலத்திற்காகவும் நாளை பிறக்கவிருக்கும் பிள்ளைகளின் நன்மைக்காகவும் புதிய ஜனாதிபதிக்கு எனது ஆசிர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.

அதேவேளை, அவர் மிகுந்த உறுதிப்பாட்டுடனும் தைரியத்துடனும் நேர்மையாக நாட்டிற்கான சேவைகளை நிறைவேற்ற கிடைக்கவேண்டுமென பிரார்த்திக்கின்றேன். 

எனது பதவிக்காலம் நிறைவடைந்து இன்று நான் ஜனாதிபதி பதவியிலிருந்து விடைபெறுகின்றேன். எனது ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவடைந்த போதிலும் தாய் நாட்டிற்கும் எனது அன்பார்ந்த மக்களுக்கும் தொடர்ச்சியாக நான் ஆற்ற வேண்டிய அனைத்து சேவைகளையும் அர்ப்பணிப்புகளையும் எதிர்காலத்திலும் தவறாது நிறைவேற்றுவதற்கு நான் உறுதியோடு இருக்கின்றேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்