ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில், எந்த மதத் தலைவருக்கும் ஆட்சேபனை இல்லை: துமிந்த

🕔 January 26, 2019

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி  பொதுமன்னிப்பு வழங்குவதில், எந்தவொரு மதத் தலைவருக்கும் ஆட்சேபனையில்லை என்று, சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“ஒரு சிங்கள பௌத்தன் எனும் வகையில், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு நான் கோரிக்கை விடுத்தேன். இந்த விடயம் தொடர்பாக மகா சங்கத்தினருடனும் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதேபோன்று ஹிந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களுடனும் பேசினேன்.

ஞானசார தேரரை விடுவிப்பதில் அந்த மதத் தலைவர்கள் எவருக்கும் எதிர்ப்பில்லை என்பதை அவர்கள் தெரிவித்தனர்” என்றார்.

அதேவேளை, “ஞானசார தேரரை சிறைக்குச் சென்று சந்தித்தேன். அப்போது; தமிழ் முஸ்லிம் மக்களுடன் தனக்கு எந்தவித விரோதமும் இல்லை என்று அவர் கூறினார்.

மேலும் பௌத்த மக்களைப் பாதிக்கும் விடயங்களுக்கு பரஸ்பர பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தங்கள் மூலம், தீர்வு காணப்பட வேண்டும் எனவும், ஞானசார தேரர் வலியுறுத்தினார்” என்றும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்