ஜனாதிபதி முறைமையை நீக்கிலானால், நாடு சோமாலியா ஆகிவிடும்: எச்சரிக்கிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

🕔 June 11, 2018

நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நீக்கப்பட்டால் நாடு சோமாலியா போல் ஆகிவிடும் என உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை தற்போது சமர்ப்பிப்பதால் பாரிய பிரச்சினைகள்  உருவாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“உள்ளுராட்சி சபைகள் ஸ்திரமற்றவையாக காணப்படும் இந்த காலகட்டத்தில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கினால் நாடு முற்றுமுழுதாக குழப்பத்திற்குள் சிக்கலாம்.

20ஆவது திருத்தம் தொடர்பில் முக்கிய பிரச்சினை உள்ளது. இது தனியொரு கட்சி அல்லது நபர் தொடர்புபட்ட விடயமல்ல. இது முழு நாட்டையும் பாதிக்ககூடிய விடயமாகும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையும் ஒன்றாகவே அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கிவிட்டு விகிதாசார முறையை நீக்காவிட்டால், பாரிய குழப்பம் ஏற்படும்.

தேர்தல் முறை மாற்றப்பட்டதால்தான் ஸ்திரமற்ற உள்ளுராட்சி சபைகள் உருவாகியுள்ளன. மாகாணசபைகள் தேர்தல் முறையும் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நீக்கப்பட்டால் நாடு சோமாலியா போல் ஆகிவிடும்” என்றார்.

Comments