சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அலிசாஹிர் மௌலானா; ஹக்கீமுக்கான அச்சுறுத்தலா?

🕔 May 7, 2018

– தம்பி –

முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான அலிசாஹிர் மௌலானா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை கலந்து கொண்டமை குறித்து அரசியலரங்கில் பரவலாகப் பேசப்படுகிறது.

சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம், மட்டக்களப்பு – மாவடி வேம்பில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் உள்ள நிலையிலேயே, சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அலிசாஹிர் மௌலானா கலந்து கொண்டுள்ளார்.

மு.காங்கிரசின்  பிரதித் தலைவர்களில் ஒருவரான ஹாபிஸ் நசீருக்கும், அந்தக் கட்சியைச் சேர்ந்த அலிசாஹிர் மௌலானாவுக்கும் இடையில் மிக கடுமையான முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், ஹாபிஸ் நசீரின் பக்கம் சார்ந்து மு.கா. தலைவர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக அலிசாஹிர் மௌலானா தரப்பு, மு.கா தலைவர் ஹக்கீம் மீது கடுமையான விசனத்துடன் இருந்து வருகின்றனர்.

அதேவேளை, சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது, அலிசாஹிர் மௌலானாவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில்தான், சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அலிசாஹிர் மௌலானா கலந்து கொண்டமையானது, முஸ்லிம் அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்