மியன்மார் மனிதப் படுகொலைக்கு எதிராக, காத்தான்குடியில் கண்டனப் பேரணி

🕔 September 1, 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் –

மியன்மார் ரோஹிங்ய முஸ்லிம் மக்களுக்கெதிராக அந்நாட்டு ராணுவம்,பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இனவாத தாக்குதல்களை கண்டித்து, மாபெரும் ஆர்ப்பாட்டமும், கண்டனப் பேரணியும் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண மக்கள் சார்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா ஆகியவை, இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தன.

மேற்படி ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனப் பேரணியில் கலந்து கொண்ட காத்தான்குடி மக்கள், காத்தான்குடி- 05 ஜாமிஉழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாசலில் இருந்து நடை பவனியாக மட்டு – கல்முனை பிரதான வீதி வழியாக காத்தான்குடி பிரதேச செயலகம் வரை சென்றனர்.

இதன்போது, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான 05 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மஹஜர் ஒன்றினை காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கரிடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கையளித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், கிழக்கு மாகண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம். பரீட், காத்தான்குடி நகர சபை முன்னாள் தவிசாளர் அஸ்பர் உட்பட முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான றவூப் ஏ மஜீட், எம்.எச்.எம். பாக்கீர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் சபீல் நளீமி, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் றிஸ்வான் மதனி உட்பட அதன் பிரதிநிதிகள், காத்தான்குடியிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மியன்மார் அரசே ரோஹிங்கிய முஸ்லிம்களின் மனிதப் படுகொலையை உடன் நிறுத்து, மனித உயிர்களுக்கு மதிப்பளி, மியன்மார் அரசே ரோஹிங்கிய குழந்தைகளை கொல்லாதே, மியன்மார் அரசே மனிதப்படுகொலை அவலத்தை நிறுத்து, ஐ.நா.வே அப்பாவி ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கு, அழிகிறது மனிதம் ஐ.நா கண்ணைத் திற போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஏந்தியிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்