காலக்கெடு வழங்குங்கள், தீர்வு கிடைக்காது விட்டால் எதிரணியில் அமருங்கள்: அதாஉல்லா அறிவுறுத்தல்

🕔 June 12, 2017

– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத நடவடிக்கைகள் தொடருமாயின், அரசாங்கத்துடன் இணைந்துள்ள 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையிலுள்ள எதிரணி ஆசனங்களில் அமர வேண்டுமென, தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட அதாஉல்லா, பின்னர் – ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே, மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

எவ்வாறாயினும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு, அரசாங்கத்துக்கு ஒரு காலக்கெடுவினை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

வழங்கப்பட்ட காலக்கெடுவினுள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வராத விடத்து, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், சபையின் எதிரணி ஆசனங்களில் அமர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பொலிஸார் கட்டுப்படுத்த வேண்டும் எனக்கூறி, ஆட்சியாளர்கள் தப்பித்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்