கக்கூசுக்குள் இறைச்சி வைத்திருந்த ஹோட்டலை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு; உரிமையாளருக்கு பிணை

🕔 May 31, 2017

சுகாதாரமற்ற முறையில் நடத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு நகரிலுள்ள இப்றாகிம் ஹோட்டலை எதிர்வரும் 15ஆம் திகதி வரை மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரிலுள்ள மேற்படி ஹோட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேற்று செவ்வாய்கிழமை திடீர் சோதனைகளை நடத்தியபோது, ஹோட்டலின் கக்கூசினுள் சமைப்பதற்கான இறைச்சிகள் மீட்கப்பட்டன. மேலும், பாவனைக்குதவாத உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சென்ற புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ். அமுதமாலன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் இந்த திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர்.

குறித்த ஹோட்டல் உரிமையாளர் நீதிமன்றில் நேற்று செவ்வாய்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களும் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டன.

ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக சுகாதாரமற்ற முறையில் ஹோட்டலை நடாத்தியமை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி ஹோட்டல் நடாத்தியமை  ஆகிய இரு குற்றங்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் தாக்கல்செய்யப்பட்டன.

இதனையடுத்து, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம். கணேசராஜா,குறித்த ஹோட்டல் உரிமையாளரை 50ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் இரு சரீரப்பிணையிலும் விடுவித்தார்.

மேலும், குறித்த ஹோட்டலை எதிர்வரும் 15ஆம் திகதி வரை மூடுமாறும், ஹோட்டல் சீர்செய்யப்பட்டு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை செய்து அறிக்கையளித்தன் பின்னரே, குறித்த ஹோட்டலை திறப்பது தொடர்பில் ஆராயப்படும் எனவும் நீதவான் மன்றில் தெரிவித்ததாக, பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ். அமுதமாலன் கூறினார்.

Comments