உதவிகளை சிறிதாகப் பிரித்து அதிகமானோருக்கு வழங்குவதை விடவும், முழமையாக ஒரு சிலருக்கு வழங்குவது மேலானதாகும்: ஷிப்லி பாறுக்

🕔 April 11, 2017
– எம்.ரீ. ஹைதர் அலி –

நிதி ஒதுக்கீடுகளை, வெறுமெனே சிறு சிறு உதவிகளாக பிரித்து அதிகமான நபர்களுக்கு வழங்குவதை விடவும், மக்களுக்கு பயன்படக்கூடிய உதவித் திட்டங்களை, ஒரு சிலருக்கேனும் முற்றுமுழுதாக பெற்றுக் கொடுப்பதனூடாகவே அவ்வுதவித் திட்டங்கள் பிரேயோசனமுள்ளவையாக அமையும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து, காத்தான்குடி 06ஆம் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட ஏழு பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனை வழங்கி வைத்து உரையாற்றும்போதே, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

“இன்று கையளிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொண்டுள்ள பயனாளிகள் அனைவரும், அதனைப் பயன்படுத்தி தமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்வார்கள் என நான் எதிர்பார்கின்றேன்.

சுமார் 2027 குடும்பங்களை உள்ளடக்கியதாக, காத்தான்குடியிலுள்ள மிகப் பெரிய கிராம சேவகர் பிரிவைக் கொண்ட 06ஆம் பிரிவு, அதிகளவான தேவைகள் நிறைந்த, பின்தங்கிய பகுதியாகும்.

எனவே இப்பிரதேசத்தில் கூடிய கவனம் செலுத்தி வளப்படுத்த வேண்டிய தேவைப்பாடும் காணப்படுகின்றது. அந்த வகையில் தொடர்ச்சியாக எங்களுடைய ஒவ்வொரு அபிவிருத்தித் திட்டங்களிலும் இப்பிரதேசம் தொடர்பாக விஷேட கவனம் செலுத்தி இயலுமான அபிவிருத்திகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும், எந்த விதமான உதவித்திட்டமாக இருந்தாலும் அது மக்களினுடைய தேவைகளை நன்கறிந்து அவற்றினை முன்னுரிமைப்படுத்தியே அவர்களுக்கான உதவித்திட்டங்கள் அனைத்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்