அது வெறும் டம்மி பீஸ்: தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள் குறித்து, தவத்தின் கருத்து

🕔 January 20, 2017

Thavam - 0111‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகம் வெளியானமையினை அடுத்து, அது தொடர்பில் பலரும் பல்வேறு விதமாக எழுதிக் கொண்டிருக்கின்றனர். சிலர் புத்தகத்திலுள்ள விடயதானங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றனர். இன்னும் சிலர், புத்தகத்தை யார் எழுதியிருப்பார் என்று யோசித்து, அதை அதை எழுதியதாக தாங்கள் நினைக்கும் நபர் அல்லது நபர்களைக் குறிவைத்து, தாக்கி எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

இன்னொருபுறம், “இந்தப் புத்தகத்திலுள்ள அனைத்தும் பொய்” என்று சிலர் மறுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மு.கா. தலைவரின் விசுவாசிகளாகவும், மு.கா. தலைவருக்கு விசுவாசத்தைக் காண்பிப்பதற்கு முயற்சிப்பவர்களாகவும் உள்ளனர்.

ஆனால், உத்தியோகபூர்வ பத்திரங்கள் என்றும், சட்டபூர்வமான ஆவணங்கள் என்றும் நம்பப்படும் ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்திலுள்ள விடயங்களை மறுப்பதாயின், அதற்கு நிகரான ஆவணங்களை முன்வைத்தே மறுக்க வேண்டும் என்பதை, சிலர் மறந்து விட்டு வெற்றுக் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதையும் காணக் கிடைக்கிறது.

எவ்வாறாயினும், கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முன்னாள் பிரமுகருமான ஏ.எல். தவம், மேற்படி புத்தகம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், நீண்ட பதிவொன்றினை இட்டிருக்கின்றார். ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகத்தினை எழுதியவர், மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் என்று தவம் நம்புகிறார். அவரின் பதிவு அப்படித்தான் சொல்கிறது.

இந்த நிலையில், அரசியல் அரங்கில் மிகக் கடுமையான அதிர்வினை ஏற்படுத்தியிருக்கும் ஒரு புத்தகம் குறித்து, சம்பந்தப்பட்ட கட்சியின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர், என்ன கருதுகின்றார் என்பது தொடர்பாக, மக்கள் அறிந்திருப்பது அவசியமாகும்.

எனவே, ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் நூல் தொடர்பில், தவம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதை, வாசகர்களுக்காக வழங்குகின்றோம்.

தாருஸ்ஸலாம் பற்றி தாறுமாறாய் எழுதும் மட்டக்களப்பு மா(வித்துவானுக்கு) – (பாகம் – 01)

‘தேசியப்பட்டியல் கிடைத்து அனுபவிக்கும்போது தாருஸ்ஸலாம் பற்றி வாய் திறக்காத நீங்கள், தேசியப்பட்டியல் கிடைக்காதபோது பேசுவதினதும் புத்தகம் வெளியிடுவதினதும் மர்மத்தைப் புரிந்துகொள்ள முடியாதளவு மக்கள் ஒன்றும் மாக்கள் இல்லை.

ஹாபிஸ் நசிர் அஹமட் மாகாண சபைத் தேர்தல் காலத்தில் மீண்டும் கட்சிக்குள் வந்த போது தாருஸ்ஸலாம் பற்றிக் கூறியிருக்கலாமே அல்லது அவர் வந்ததிலிருந்து நீங்களும் அவரும் கட்சிக்குள் சுமார் மூன்று வருடங்கள் ஒன்றாக இருந்தபோது தாருஸ்ஸலாம் பற்றிக் கூறியிருக்கலாமே. கூறாதது ஏன்?

அப்போது நீங்கள் அதிகாரத்தில் இருந்தீர்கள். அதனால் பேச வேண்டிய தேவையில்லை. இப்போது தேசியப்பட்டியல் உங்களுக்கு கிடைக்கவில்லை. அதிகாரம் உங்களுக்கு இல்லை. அதனால் எழுதுகிறீர்கள். இந்த “சிம்பிள் லாஜிக்கைக்” கூட விளங்க முடியாதளவுக்கு மக்கள் முட்டாள்களாக இருப்பார்கள் என்று நீங்கள் எண்ணிக்கொள்வது கவலை தருகிறது.

“ஹாபிஸ் நசிர் அஹமட்டிடம் மாட்டிய தாருஸ்ஸலாம் உங்களிடம் மாட்டியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? இந்நேரம் பிரிச்சி விற்றிருப்பீர்களாம். கட்டிடமும் காணியும் இருந்த இடமே இல்லாமல் போயிருக்குமாம். அல்லாஹ் காப்பாற்றினான். அப்படி விற்றதற்குக் கூட ஒரு கதையைச் சொல்லி இருப்பீர்களாம், கட்சிக்குத் தெரியாமல் கள்ளத்தனமாக அமைச்சு எடுத்து விட்டுச் சொல்லிய கதையைப் போல”. இப்படி மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இது காதுகளுக்கு விழவில்லை போலும்.

ஓகே, உங்கள் வழிக்கே வருகிறோம். யுனிட்டி பில்டர்ஸ் கம்பனிக்கு என்ன சொத்திருக்கிறது ஹாபிஸ் நசிர் அஹமட்டும் றஊப் ஹக்கீமும் அனுபவிக்க? அதன் பேரில் தாருஸ்ஸலாம் கட்டிடமோ அல்லது அதனோடு சேர்ந்த வெற்று நிலமோ இருக்கிறதா? இல்லையே. இதைப் பற்றி ஏன் கூறவில்லை? கூற மாட்டீர்கள். ஏனென்றால் அதை கூறினால் உங்களது வஞ்சக நோக்கத்தை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.

யுனிட்டி பில்டர்ஸ் கம்பனி என்பது வெறும் டம்மி பீஸ். பராமரிப்புக்காக உருவாக்கப்பட்ட வெறும் வெற்றுவேட்டு. தண்ணி பில்லும் கரண்டு பில்லும் கட்டுவதற்கு உருவாக்கப்பட்ட சம்பளம் இல்லாத உயிரற்ற ஊழியன். இன்னும் விபரமாகக் கூறினால் உங்களில் யாரிலும் நம்பிக்கை இல்லாமல் தலைவர் அஷ்ரப் உண்டாக்கிய நம்பிக்கைக்குரிய விசுவாசி.

இப்படி ஒன்றுமில்லாத ஒன்றை ஊதிப் பெருப்பித்து கட்சிக்கும் தலைமைக்கும் மக்களிடம் களங்கம் விளைவிக்கும் மட்டக்களப்பு மாவித்துவானே! உங்கள் ஆசைகள் நிறைவேறி ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம். ஆனால், அதற்காக முஸ்லிம் தேசியத்தின் ஆன்மா அஷ்ரபின் பேரைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் கேவலமான மரணத்தின் பிடியை நீங்களாக வலிந்து அழைக்க வேண்டாம்’ என்று தவம் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

தொடர்பான செய்தி: தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்; புத்தகம் வந்ததால் ஹக்கீம், ஹாபிஸ் நஸீர் அதிர்ச்சி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்