தலைப்புச் செய்திகள்

சிக்கலான நிலையில் உயர்பீடத்தைக் கூட்டுகிறது மு.காங்கிரஸ்; அழைப்புக் கடிதத்தில் நிகழ்சி நிரல் இல்லை

high-command-letter-011– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை 14 ஆம் திகதி கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமில் மாலை 5.00  மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்துக்கான அழைப்புக் கடிதங்கள் உயர்பீட உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வழமையாக உயர்பீடக் கூட்டத்துக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும் போது, அந்தக் கூட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பான நிகழ்ச்சி நிரலும் சேர்த்து அனுப்பப்படுவது வழமையாகும். ஆனால், தற்போது அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதத்துடன் நிகழ்ச்சி நிரல் இணைக்கப்படவில்லை.

மு.காங்கிரசின் செயலாளர் தொடர்பான சிக்கலுக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் தீர்வினைக் காணுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ள நிலையில், மு.கா.வின்  மேற்படி உயர்பீடக் கூட்டம் நடைபெறவுள்மை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 14 ஆம் திகதி நடைபெறவுள்ள உயர்பீடக் கூட்டத்துக்கு மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் எம்.ரி. ஹசனலி ஆகியோர் சமூகமளிப்பார்களா என்கிற கேள்வி கட்சிக்குள் எழுந்துள்ளது.

மு.காங்கிரசின் தவிசாளர் மற்றும் செயலாளருடன் அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் முரண்பட்டுள்ள நிலையில், கடந்த சில உயர்பீடக் கூட்டங்களுக்கு தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் சமூகமளித்திருக்கவில்லை.

எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரஸ் கடுமையான சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டுள்ள தற்போதைய நிலையில், அந்தக் கட்சியின் தலைவர்கள் இணைந்து தீர்க்கமான முடிவொன்று வரவேண்டியுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இம்மாதம் 15ஆம் திகதிக்குள் முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பதவி தொடர்பில் அந்தக் கட்சி தீர்வொன்றினைக் காணவில்லையாயின், அதனைத் தொடர்ந்து வரும் தேர்தல்களில் அந்தக் கட்சி, தனது சின்னத்தில் போட்டியிடுவதிலே சிக்கல்கள் உருவாகும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.