வகுப்புத் தடையை நீக்கக்கோரி, தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்
🕔 December 8, 2016
– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் –
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு நிருவாகத்தினர் விதித்துள்ள வகுப்புத்தடையினை நீக்குமாறு கோரிக்கை விடுத்து, பல்கலைக்கழகத்தின் ஒரு தொகுதி மாணவர்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.
ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தின் முகப்பு வாயிலில் ஒன்று கூடிய மாணவர்கள், பல்கலைக்கழக நிருவாகம் – மாணவர்கள் 10 பேருக்கு எதிராக விதித்துள்ள வகுப்புத் தடையினை நீக்குமாறு கோரி கோசமிட்டனர்.
அதேவேளை, பல்கலைக்கழகத்தில் தாம் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் குறித்து இங்கு எடுத்துக் கூறிய மாணவர்கள், அவற்றுக்கு உடனடியாகத் தீர்வினை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
பல்கலைக்கழகத்தின் பெண் மாணவிகள் தங்கும் விடுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கண்காணிப்புக் கமராக்களை அகற்றுமாறு, இதன்போது – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரினார்கள்.
மேலும், பல்கலைக்கழ உணவகத்தில் அதிக விலைக்கு சோற்றுப் பொதிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், பல்கலைக்கழகத்தில் குப்பைகள் முறையாக அகப்படுவதில்லை எனவும், அவற்றுக்கு தீர்வுகளை வழங்க வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களையும் சேர்ந்த சிங்கள மாணவர்களே, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில், பல்கலைக்கழகத்தின் உத்தியோகத்தர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதோடு, அவர்களை மிகமோசமாகப் பேசிய மாணவர்களுக்கே வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.
இதேவேளை, மாணவர்களின் ஏனைய குற்றச்சாட்டுக்களை நிராகித்த உபவேந்தர், பெண் மாணவிகளின் பாதுகாப்பு கருதியே, அவர்களின் விடுதியின் நுழைவாயில் பகுதியில் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்டதாகவும் உபவேந்தர் கூறினார்.
மேலும், பல்கலைக்கழக உணவகங்களில் மாணவர்களுக்கு குறைந்த விலையில் சோற்றுப் பொதிகள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறிய உபவேந்தர், அதிக விலையில் விற்கப்படும் சிறப்பு சோற்றுப் பொதிகளையே, குறைந்த விலைக்கு வழங்குமாறு மாணவர்கள் கோருவதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், சில மணிநேரத்தின் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.