கோட்டா வேண்டாம்: மஹிந்தவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

🕔 June 13, 2018

கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படக் கூடாது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு களமிறங்குவதை மேற்குலகம் விரும்பவில்லை என்றும் அவர் இதன் போது கூறியுள்ளார்.

இலங்கையில் தனது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஞாயிற்றுக்கிழமை இரவு மஹிந்த ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

இந்த ரகிசிய சந்திப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ எந்த கருத்தையும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தவில்லை.

ஆயினும் குறித்த சந்திப்பு தொடர்பாக நம்பகமான வட்டாரங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பில், மேற்குலகத்தின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கத் தூதுவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

“கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை மேற்குலகம் சாதகமாக நோக்காது. அதனை மேற்குலகம் விரும்பவில்லை” என்றும் அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் இதன்போது கூறியுள்ளார்.

ஜனநாயக அரசியலுக்குப் பொருத்தமான- அனுபவமும், அரசியல் முதிர்ச்சியும் உள்ள ஒருவரே நாட்டின் தலைவராக வேண்டும் என்ற தொனியில், அவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

அமெரிக்கத் தூதுவரின் இந்த நிலைப்பாடு, ராஜபக்ஷ குடும்பத்துக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.

Comments