‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’: சுவரொட்டி குறித்து, பொலிஸார் விளக்கம்

🕔 May 22, 2018

‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’ என்ற சிங்கள வாசகத்துடன் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தொடர்பில், முஸ்லிம் மக்களிடையே பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மேற்படி சுவரொட்டியானது, சிங்கள பாடசாலையொன்றின் நடைபவனி தொடர்பான பிரச்சாரம் தொடர்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘மே 26 தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா’ என்ற சிங்கள வாசகத்துடன் சுவரொட்டிகள் – கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தெஹிவளையிலுள்ள பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.

நாட்டில் இனவாத சூழ்நிலைகளுக்கு மத்தியில் இதுபோன்ற சுவரொட்டி ஒட்டப்பட்டமையானது, முஸ்லிம்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தைத் தோற்றுவித்திருந்தது.

குறித்த சுவரொட்டி தொடர்பில் முஸ்லிம் ‘கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா’ தலைவர் என்.எம். அமீனுடைய ஆலோசனைக்கு அமைய, தெஹிவளை நகரசபை உறுப்பினர் மரீனா ஆப்தீன், தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் தகவல் கோரியிருந்தார்.

இந்த நிலையில், தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜெயசின்ஹ பாடசாலையின் பழைய மாணவர்களால் எதிர்வரும் மே 26ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனி தொடர்பான பிரச்சாரத்துக்காக இந்த சுவரொட்டி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் நடைபவனியை ஏற்பாடு செய்த குறித்த பாடசாலை பழைய மாணவர்களை வரவழைத்த பொலிஸார், பொதுமக்களை அச்சமூட்டும் வகையில் மேற்கொண்ட பிரச்சார நடவடிக்கைகளைக் கண்டித்ததுடன், உடனடியாக மக்கள் தெளிவு பெரும் விதமான சுவரொட்டிகளை காட்சிப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்